ஈரானில் ஆட்சி மாற்றமா? - காமெனி கொல்லப்பட்டால் அடுத்த தலைவராக யாருக்கெல்லாம் வாய்ப்பு?
காமெனி கொல்லப்பட்டால் ஈரானின் புதிய உச்சத்தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார், யாருக்கெல்லாம் வாய்ப்பு என பார்க்கலாம்.
காமெனி உயிருக்கு குறி
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் திகதி, இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
ஈரானும் தனது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வரும் நிலையில், 6வது நாளாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஈரானின் உச்சத்தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டால் தான் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதியை காமெனி சந்திக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்க அதிபர் டிரம்பும், காமெனியின் இருப்பிடம் துல்லியமாக எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு எளிதான இலக்கு தான் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகளை கொன்று விட்ட இஸ்ரேல் தற்போது கமேனிக்கு குறி வைக்கிறது.
அமெரிக்காவும், மத்திய கிழக்கில் தனக்கு ஒத்துவராத ஒரே நாடான ஈரானில் ஆட்சிமாற்றத்தை விரும்பி, தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தி வருகிறது.
ரெசா பஹ்லவி
அதேவேளையில், ஈரானின் உள்ளேயும் அதன் உச்சத்தலைவர் காமெனிக்கு எதிராக குரல் எழுந்துள்ளது.
ஈரானின் கடைசி மன்னர் முகமது ரெசா பஹ்லவியின் மகன் ரெசா பஹ்லவி, 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் நாடு கடந்து அமெரிக்காவில் வாழ்கிறார்.
தற்போது ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அவர், "அலி காமெனி நிலத்தடியில் ஒளிந்து வாழ்கிறார். நாட்டின் மீதான கட்டுப்பாட்டை பராமரிக்கவில்லை. இஸ்லாமிய குடியரசு வீழ்ச்சியடையும் தருவாயில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
The Islamic Republic has come to its end and is collapsing. What has begun is irreversible. The future is bright, and together we will turn the page of history. Now is the time to stand up; the time to reclaim Iran. May I be with you soon. pic.twitter.com/qrbnDmf8SX
— Reza Pahlavi (@PahlaviReza) June 17, 2025
மதச்சார்பற்ற, ஜனநாயக ஈரானை ஆதரிக்கும் இவர், மன்னராட்சியை மீண்டும் கொண்டுவருவதை விட, மக்களின் ஓட்டெடுப்பு வாயிலாக ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
காமெனி கொல்லப்பட்டு, ஈரானில் அமெரிக்கா தனது பொம்மை அரசை நிறுவ வாய்ப்பு கிடைத்தால், ரெசா பஹ்லவியை தேர்வு செய்வார்கள்.
ஆனால், காமெனி கொல்லப்பட்டாலும், சிரியா போல் தனக்கு சாதகமான அரசை நிறுவ, அமெரிக்காவிற்கு ஈரானில் குறைவான சாத்திய கூறுகளே உள்ளது.
தேர்வு நடைபெறும் முறை
ஈரானின் உச்ச தலைவர் இறந்துவிட்டாலோ, தகுதியற்றவராகிவிட்டாலோ அல்லது ராஜினாமா செய்துவிட்டாலோ, தலைமைத்துவத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப ஒரு வாரிசைத் தேர்ந்தெடுக்க 88 மூத்த மதகுருமார்களைக் கொண்ட நிபுணர்கள் சபை கூட்டப்படுகிறது.
இந்த சபை பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஈரானின் கார்டியன் கவுன்சிலால் சரிபார்க்கப்படுகிறது. இது 8 ஆண்டு பதவிக்காலம் நீடிக்கும் ஒரு அமைப்பாகும்.
அவர்கள் ஒரு ரகசிய அமர்வில் கூடி, வேட்பாளர்களை பரிந்துரைத்து வாக்களிக்கிறார்கள். ஒவ்வொரு வேட்பாளரின் மதச் சான்றுகள், அரசியல் விசுவாசம் மற்றும் ஆட்சி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான திறன் ஆகியவற்றைப் பற்றி விவாதித்து மதிப்பிடுகிறார்கள்.
புதிய உச்சத் தலைவரை நியமிக்க 88 வாக்குகளில் குறைந்தபட்சம் 45 வாக்குகள் தேவை. கோஷ்டி மோதல்களைத் தவிர்க்க சட்டமன்றம் ஒருமித்த கருத்தை நாடுகிறது.
யாருக்கெல்லாம் வாய்ப்பு?
ஒருவேளை காமெனிக்கு பதில், ஈரானின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டால் யாருக்கெல்லாம் வாய்ப்புள்ளது என பார்க்கலாம்.
மொஜ்தபா காமெனி
காமெனியின் இரண்டாவது மகனும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானின் மதகுருமார்கள் அமைப்பு ஆகிய இரண்டுடனும் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளார் மொஜ்தபா கமேனி.
வாரிசுரிமை அச்சம் இருந்தாலும், அடுத்த தலைமைக்கு பொருத்தமாக இருப்பார் என நம்பபடுகிறார்.
அலிரேசா அரஃபி
மூத்த மதகுரு, நிபுணர்கள் சபையின் உறுப்பினர், கோமில் உள்ள ஈரானின் குவாமில் உள்ள ஷியா முஸ்லிம் மதப்பள்ளியின் தலைவர் மற்றும் உச்ச தலைவர் பதவிக்கான வேட்பாளரை அனுமதிக்கும் கார்டியன் கவுன்சிலிலும் பணியாற்றுகிறார்.
மத மற்றும் அரசியல் நிறுவனங்களில் ஆழமான செல்வாக்கு செலுத்தும் இவருக்கும் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளதாக நம்பபடுகிறது.
அயதுல்லா ஹாஷேம் ஹொசைனி புஷேரி
நிபுணர்கள் சபையின் முதல் துணைத் தலைவரும், கோம் செமினரி சொசைட்டியின் தலைவருமான இவர், காமெனியின் வட்டத்திற்குள் ஒரு நம்பகமான நபராக இருந்துளார். உச்சத் தலைவரின் சார்பாக கோமில் வெள்ளிக்கிழமை தொழுகைகளை நடத்துகிறார்.
அலி அஸ்கர் ஹெஜாசி
காமெனியின் அலுவலகத்தில் அரசியல்-பாதுகாப்பு விவகாரங்களை மேற்பார்வையிடும் சக்திவாய்ந்த நபராக இருப்பவர் ஹெஜாசி. ஈரானின் உளவுத்துறை வலையமைப்பில் ஆழமாகப் பதிந்துள்ள அவர், பொதுமக்களின் பார்வையை விட மூலோபாய செல்வாக்கிற்காக அறியப்படுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |