முதல் கணவருடன் விவாகரத்து வாங்காமல்., 2 -வது திருமணம் செய்த இளம்பெண் கைது
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம்பெண் கைது
தமிழக மாவட்டமான கரூர் சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் கதர்மங்கலம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கும், கோவை மாவட்டம் செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த கிருத்திகா (25) என்பவருக்கும் கடந்த 2020 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் செல்வக்குமார் புதுக்கோட்டையில் தனது குடும்பத்துடன் தங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது, கிருத்திகா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக அடிக்கடி கோவைக்கு சென்று வந்துள்ளார்.
இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2023 -ம் ஆண்டு தனது தாயை பார்க்க செல்வதாக கூறி கரூரில் இருக்கும் செல்வகுமாரின் தந்தை வீட்டிற்கு கிருத்திகா சென்றுள்ளார்.
அப்போது அவர் நகை, பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக செல்வக்குமாருக்கு, அவரது தந்தை துரைசாமி கூறியுள்ளார். இதையடுத்து, கிருத்திகாவை செல்வகுமார் தொடர்பு கொண்டபோது அவரது அழைப்பை ஏற்கவில்லை.
பின்னர், கோவைக்கு சென்று பார்த்த போதும் அவர்கள் வீடு காலி செய்துவிட்டதாக அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், விசாரித்தபோது செஞ்சேரிமலை பகுதியில் கிருத்திகா தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அங்கு சென்று செல்வகுமார் அழைத்தபோதும் கிருத்திகா வர மறுத்துவிட்டார்.
அப்போது தான் கிருத்திகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி, முதல் கணவரிடம் விவாகரத்து பெறாமலேயே செல்வக்குமாருடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், செல்வக்குமார் கொடுத்த தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை கேட்டபோது தன்னை துன்புறுத்தியதாக பொலிஸில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, முதல் திருமணத்தை மறைத்து விவாகரத்து பெறாமலேயே தன்னை 2-வதாக திருமணம் செய்ததாகவும், பணம் மற்றும் நகையை கிருத்திகா எடுத்து சென்றுவிட்டார் என்றும் நீதிமன்றத்தில் செல்வகுமார் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து கிருத்திகாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |