மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்கவில்லையா! காரணத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்
மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை
குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
பின்பு, யாரெல்லாம் இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறலாம் என்று பயனாளிகளுக்கான தகுதியினை தமிழக அரசு அறிவித்தது.
அந்தவகையில், இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி, 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
ஏன் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை?
இதில், தகுதியுள்ள மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே உங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரி கூறுகையில், "அரசு தொடங்கியுள்ள இந்த இணையதளம் மூலம் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்ட காரணத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் குறிப்பிட்ட ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
அப்போது, உங்களது மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதன் மூலம் என்ன காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்" எனக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |