உலகின் ஏழ்மையான ஜனாதிபதி ஜோஸ் முஜிகா உயிரிழப்பு
உலகின் ஏழ்மையான ஜனாதிபதியாக கருதப்பட்ட ஜோஸ் முஜிகா உயிரிழந்துள்ளார்.
உலகின் ஏழ்மையான ஜனாதிபதி
2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை உருகுவே நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜோஸ் முஜிகா(Jose Mujica).
இவர் தனது எளிய வாழ்க்கை முறை காரணமாக உலகின் ஏழ்மையான ஜனாதிபதி என அழைக்கப்பட்டார்.
கியூபா புரட்சியால் ஈர்க்கப்பட்ட இவர், 1960 களில் ஆயுதம் ஏந்திய இடதுசாரி கெரில்லா போராளியாக, உருகுவேயில் நடைபெற்று வந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினார். இதில், இராணுவத்தால் கைது செய்யப்பட்ட முஜிகா, 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
இதனையடுத்து, MPP என்ற அரசியல் கட்சியில் பயணித்து வந்த அவர், 2005 முதல் 2009 வரை விவசாய மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
அதை தொடர்ந்து, 2009 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, உருகுவேவின் 40வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
எளிமையான வாழ்க்கை
தனது பதவிக்காலத்தில் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகை மற்றும் அதன் ஊழியர்களை பயன்படுத்துவதை தவிர்த்து, தனது பண்ணை வீட்டிலே வசித்து வந்தார்.
மேலும், 1987 ஆம் ஆண்டு வாங்கிய தனது வோக்ஸ்வாகன் கார் மற்றும் 60 ஆண்டு கால பழமையான மிதிவண்டியையே பயன்படுத்தி வந்தார்.
ஜனாதிபதிக்கான தனது சம்பளமான 12,000 அமெரிக்க டொலரில், 90 சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு தானம் செய்தார்.
தனது ஆட்சிக்காலத்தில், உருகுவேவை பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றியவர், கருக்கலைப்பு மற்றும் தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கினார்.
உயிரிழப்பு
2024 ஆம் ஆண்டு, முஜிகாவிற்கு உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அந்த புற்றுநோய் அவரது கல்லீரலுக்கு பரவியது.
இதனால் தீவிர நோய்வாய்ப்பட்ட முஜிகா, மே 13 ஆம் திகதி தனது பண்ணை வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவை உருகுவேவின் தற்போதைய ஜனாதிபதி யமண்டு ஓர்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எங்கள் தோழர் பெப்பே முஜிகாவின் மறைவை நாங்கள் ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறோம். தலைவர், போராளி மற்றும் வழிகாட்டி.
Con profundo dolor comunicamos que falleció nuestro compañero Pepe Mujica. Presidente, militante, referente y conductor. Te vamos a extrañar mucho Viejo querido. Gracias por todo lo que nos diste y por tu profundo amor por tu pueblo.
— Yamandú Orsi (@OrsiYamandu) May 13, 2025
அன்புள்ள முதியவரே, உங்களை நாங்கள் மிகவும் இழக்கிறோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த அனைத்திற்கும், உங்கள் மக்கள் மீதான உங்கள் ஆழ்ந்த அன்புக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
அவரது மறைவிற்கு உருகுவே 3 நாள் துக்கம் அனுசரிக்கிறது. முஜிகாவின் மறைவிற்குபல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |