கடவுள் எப்படி இப்படிப்பட்டவர்களை உருவாக்குகிறார்? கொந்தளித்த மல்யுத்த வீராங்கனை
இந்திய தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து சாக்ஷி மாலிக் என்ற வீராங்கனை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மல்யுத்த வீரர்களை கைது செய்த பொலிஸார்
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள், நேற்றைய தினம் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை தடுத்த பொலிஸார், குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர்.
PTI
இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. மேலும், வீராங்கனைகள் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது சிரித்துக் கொண்டிருக்குமாறு புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
எதிர்க்கட்சிகள், தேசிய மற்றும் மாநில தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
கொந்தளித்த வீராங்கனை
இந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நேற்று நடந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், 'நேற்றைய நிலைமை மோசமாக இருந்தது. நாங்கள் அமைதியாக அணிவகுப்பு நடத்த விரும்பினோம், ஆனால் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.
ஜந்தர் மந்தரில் இருந்து வலதுபுறம் தடுப்புகள் இருந்தன. அவர்கள் எங்களை தள்ளத் தொடங்கினர். பேருந்துகளுக்கு இழுத்துச் சென்றனர். நாங்கள் கலவரம் செய்யவில்லை, எந்த பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தவில்லை. ஆனால், மீண்டும் தடுத்து வைக்கப்பட்டோம்' என தெரிவித்துள்ளார்.
IANS
மார்பிங் புகைப்படம்
மேலும் அவர், காவலில் வைக்கப்பட்டிருந்த வினேஷ் போகட், சங்கீதா போகட் ஆகியோரின் மார்பிங் புகைப்படம் குறித்து கூறும்போது, 'இதை செய்பவர்களுக்கு வெட்கமே இல்லை. கடவுள் எப்படி இப்படிப்பட்டவர்களை உருவாக்குகிறார்? கலங்கி நிற்கும் பெண்களின் முகத்தில் புன்னகையை ஓட்டுவது...அவர்களுக்கு இதயம் கூட இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அவர்கள் எங்களை இழிவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். IT செல் ஆட்கள் இந்தப் பொய் படத்தைப் பரப்புகிறார்கள். இந்த போலியான படத்தை வெளியிடுபவர்கள் மீது புகார் அளிக்கப்படும் என்று நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம்' என்றார்.
முன்னதாக, மல்யுத்த வீரர்களை போராட்ட இடத்திற்கு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்றும், சட்டத்தை மீறியதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் டெல்லி பொலிஸார் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.