ராமரிடம் கேட்டேன்! அயோத்தியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடாதது குறித்து பூசாரி விளக்கம்
அயோத்தி சட்டசபை தொகுதியில், பாஜக சார்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடாதது குறித்து ராமர் கோவில் தலைமை பூசாரி பேட்டி அளித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ஆம் திகதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சட்டசபை தேர்தலுக்கான 107 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த வாரம் வெளியிட்டது.
அதன் படி அயோத்தி அல்லது மதுரா தொகுதியில் ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருவதால், நிச்சயமாக ஆதித்யநாத் இங்கு தான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஏன் இந்த மாற்றம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் அளித்துள்ள பேட்டியில், அயோத்தியில் ஆதித்யநாத் போட்டியிடாதது நல்லதுதான். அங்கு அவருக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது.
அயோத்தியில் ஆதித்யநாத்தால், எளிதாக வெல்ல முடியாது. நானே அவரிடம் அயோத்தியில் போட்டியிட வேண்டாம் என்று கூறினேன்.
கோரக்பூர்தான் உங்களின் வலுவான தொகுதி. அங்கேயே போட்டியிடுங்கள் என்று அறிவுறித்தினேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு புனரமைப்பு பணிகள் நடக்கின்றன.
இதனால் பல கடைகளை அரசு அகற்றி உள்ளது. நிலங்களை அரசு கைப்பற்றி உள்ளது. இதனால் மக்கள் கோபமாக உள்ளனர். வீடுகளை, கடைகளை இழந்த மக்கள் அரசு மீது கோபமாக உள்ளனர்.
எனவே அங்கே போட்டியிடாதீர்கள் என்று கூறினேன். நான் இதை பற்றி கடவுள் ராமரிடம் கேட்டேன்.
ராமர் கடவுளிடம் கேட்ட பின்புதான் நான் யோகிக்கு இந்த அறிவுரையை வழங்கியதாக கூறியுள்ளார்.