முதலில் போர் நிறுத்தம் வேண்டும்! பின்னர்தான் மற்றவை நடக்கும் - ஜெலென்ஸ்கி தடாலடி
ரஷ்யா போர்நிறுத்தம் மட்டுமின்றி வேறு சில கொள்கைகளையும் விரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் - புடின் உரையாடல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரண்டு மணிநேரம் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்தார்.
அதில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்றும், அதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே பாரிய அளவிலான வர்த்தகம் நடைபெற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ரஷ்யாவை நம்ப தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
நிறைய இழப்புகள் ஏற்பட்டுவிட்டன
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ரஷ்ய தரப்பு கொள்கைகளை பற்றி எனக்கு தெரியாது. ட்ரம்புடனான எங்களுடைய பேச்சுவார்த்தையின் வழியே நான் புரிந்துகொண்ட விடயம் என்னவென்றால், ரஷ்ய தரப்பு எங்களுக்கு குறிப்பு ஒன்றை அனுப்ப விரும்புகிறது என தெரிகிறது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "போர்நிறுத்தம் மட்டுமின்றி அவர்கள் வேறு சில கொள்கைகளையும் விரும்புகிறார்கள். போர் நிறுத்தத்திற்கு ஒவ்வொருவரும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். நிறைய இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. உண்மையில் போர் முடிவுக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்கு ரஷ்யா தயாராக உள்ளதா? என எனக்கு உறுதியாக தெரியவில்லை.
நாங்கள் அவர்களை நம்ப தயாராக இல்லை. முதல் நடவடிக்கையாக போர்நிறுத்தம் வேண்டும். உண்மையில் போரை நிறுத்த தயாராக இருக்கிறார்கள் என அவர்கள் காட்ட வேண்டும். அதன் பின்னரே கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
அத்துடன் ரஷ்யாவுடன் இதற்காக நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |