புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம்
விளாடிமிர் புடினை சந்திப்பதற்கு முன்பு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாதுகாப்பு உத்தரவாதங்களை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி
உக்ரைன், ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி ட்ரம்ப், புடின் ஆகியோருடனான மூன்று வழி சந்திப்பு மட்டுமே என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) மற்றும் விளாடிமிர் புடின் (Vladimir Putin) இருவரும் அலாஸ்காவில் சந்தித்து பேசினர்.
அதன் பின்னர் புடினுக்கும், ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான உச்சி மாநாட்டிற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும், அதன் பிறகு தன்னை உள்ளடக்கிய முத்தரப்பு அமர்வு நடைபெறலாம் என்றும் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், ரஷ்யா இன்னும் அந்தத் திட்டங்களை உறுதிப்படுத்தவில்லை.
பாதுகாப்பு உத்தரவாதங்கள்
இந்த நிலையில், புடினுடன் நேரில் சந்திக்க ஒப்புக்கொள்வதற்கு முன், மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து மேலும் தெளிவு பெற விரும்புவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ஏழு முதல் 10 நாட்களுக்குள் பாதுகாப்பு உத்தரவாதக் கட்டமைப்பைப் பற்றிய புரிதலைப் பெற விரும்புகிறோம். ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் எந்த நாடு என்ன செய்யத் தயாராக இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், நடுநிலையான ஐரோப்பிய நாட்டில் மட்டுமே புடினுடனான சந்திப்பைக் காண ஜெலென்ஸ்கி விரும்புகிறார்.
அவர், "சுவிட்சர்லாந்து, அவுஸ்திரியாவை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்...எங்களைப் பொறுத்தவரை துருக்கி ஒரு நேட்டோ நாடு மற்றும் ஐரோப்பாவின் ஒரு பகுதி மற்றும் நாங்கள் எதிர்க்கவில்லை" என சந்திப்பிற்கான சாத்தியமான இடங்கள் குறித்து கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |