அவுஸ்திரேலியாவில் 1 லட்சம் வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் பறிமுதல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவில் ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1 லட்சம் கரப்பான் பூச்சிகள் பறிமுதல்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் சட்டவிரோதமாக வளர்த்து வந்த கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கு அதிகமான கரப்பான் பூச்சிகளை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த கரப்பான் பூச்சிகளின் மதிப்பு சுமார் 1,42,000 டொலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பூச்சிகளில், மடகாஸ்கர் ஹிஸ்ஸிங் கரப்பான் பூச்சி(Madagascar hissing cockroaches) மற்றும் துபியா கரப்பான் பூச்சிகள்(Dubia Cockroaches) முக்கியமானவை ஆகும்.
அவுஸ்திரேலியாவில் பொதுவாக கரப்பான் பூச்சிகள் 3.6 செ.மீ மட்டுமே வளரும் நிலையில், மடகாஸ்கர் ஹிஸ்ஸிங் கரப்பான் பூச்சிகள் 5 முதல் 7.5 செ.மீ நீளம் வளர்க்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய சட்டப்படி இத்தகைய கரப்பான் பூச்சிகளை இறக்குமதி செய்வது, வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது பெரும் குற்றமாகும்.
அவுஸ்திரேலிய வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் வெளிநாட்டு பூச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்றும், பறிமுதல் செய்யப்பட்ட பூச்சிகள் அனைத்தும் முறைப்படி அழிக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட பூச்சிகள் செல்லப்பிராணிகளுக்கு உணவாக வழங்க திட்டமிட்டு சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு பூச்சிகளை செல்லப்பிராணிகளின் உணவுக்காக அதன் உரிமையாளர் பயன்படுத்த கூடாது என்றும். மாற்றாக சட்டப்பூர்வமான உள்நாட்டு பூச்சி இனங்களான கிரிக்கெட் பூச்சிகள் அல்லது மர கரப்பான் பூச்சிகளை செல்லப்பிராணி உரிமையாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |