அதிகரிக்கும் வன்முறை., தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறும் 1000 நைஜீரியர்கள்
தென்னாப்பிரிக்காவிலிருந்து 1000க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் தாயகம் திரும்ப திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியர்கள் வெளியேற்றம்
தென்னாப்பிரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் தாயகம் திரும்ப தாமாக முன்வந்து பதிவு செய்து இருப்பதாக நைஜீரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

வெளியேற விருப்பப்படும் தகுதியான நபர்களை கண்டறிய நைஜீரிய அமைச்சகம் தென்னாப்பிரிக்க குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெளியேறுதல்களை சுலபமாக்கும் வகையில், விசா காலாவதி, விதிமீறல்கள் போன்ற காரணங்களுக்காக விதிக்கப்படும் அபராதங்கள் ஆகியவற்றை ரத்து செய்ய தென்னாப்பிரிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த நடைமுறையின் கீழ் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியேற விரும்பும் விண்ணப்பத்தாரர்களின் இறுதி எண்ணிக்கை மாறுபடும் என்றாலும், மொத்தம் 1000 பேருக்கு மேல் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நைஜீரிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கிமிபி எபியென்பா தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |