அதிகாலையில் 11 பேர் மரணம்! நின்றிருந்த பேருந்து மீது கண்டெய்னர் லொறி மோதி விபத்து
இந்திய மாநிலம், ராஜஸ்தானில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலையில் விபத்து
குஜராத் மாநிலம், பாவ்நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவுக்கு இன்று அதிகாலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றது.
அப்போது அதிகாலை 4.30 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் ஜெய்ப்பூர் - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்தரா என்ற மேம்பாலத்தில் பேருந்து நின்றது. அந்த நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லொறி, பேருந்து மீது வேகமாக மோதியது.
11 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள், 5 ஆண்கள் என 11 பேருந்து பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இதில், விபத்தில் இறந்தவர்கள் குஜராத்தின் பால்நகரைச் சேர்ந்த மதுபென், அம்பாபென், கம்புபென், அந்து, நந்த்ரம், லல்லு, ரமுபென், அஞ்சுபென், பாரத், லால்ஜி மற்றும் மதுபென் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவல் கண்காணிப்பாளர் மிருதுள் கச்சாவா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லொறி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |