குஜராத்தில் கரையை கடக்கும் பைபர்ஜாப் புயல்: 140 கி மீ வேகத்தில் சூறைக் காற்று, கதிகலங்கும் மக்கள்
பைபர்ஜாப் புயல் கரையை தொட்டு இருக்கும் நிலையில் குஜராத்தின் சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரையை தொட்டு இருக்கும் பைபர்ஜாப் புயல்
அரபிக் கடலில் மையம் கொண்டு இருந்த பைபர்ஜாப் புயல், வியாழக்கிழமை மாலை குஜராத்தின் சௌராஷ்ட்ரா, கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடல் பகுதியில் மிகத் தீவிர புயலாக மாறியது.
மேலும் இந்த பைபர்ஜாப் புயல் குஜராத்தின் மாண்டிவி மற்றும் ஜக்காவு துறைமுகம் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது.
அத்துடன் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் மையத்தில் 140 கிலோமீட்டர் வேகத்திலும் காற்றின் வேகம் இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் பைபர்ஜாப் புயலின் வெளிப்புறம் 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் கரையை தொட்டு கடக்க தொடங்கியது. அதனடிப்படையில் தற்போது பைபர்ஜாப் புயலின் மையப்பகுதி குஜராத்தின் நாலியா, மாண்ட்வி, துவாரகா, சலாயா, ஜாம்நகர் ஆகிய கடலோர பகுதியை தொட்டு கடந்து வருகிறது.
மேலும் காற்று 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதிப்புகள்
புயல் கரையை கடந்து வருவதால் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் பலத்த கனமழை பெய்து வருகிறது.
மின் இணைப்புகள் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டதுடன், பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளது. அத்துடன் இந்த பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாநில அரசும் புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |