பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல.. பாவ யாத்திரை! தமிழக முதலமைச்சர் விமர்சனம்
தமிழகத்தில் அண்ணாமலை நடத்துவது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
உதயநிதியின் உழைப்புக்கு கிடைத்தது அமைச்சர் பதவி
இந்திய மாநிலம் தமிழகத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அப்போது தமிழக முதலமைச்சர் கூட்டத்தில் பேசிய போது,"எனக்கு வயது 70 ஆகிறது. ஆனால், நான் உங்கள் முன்னாள் நிற்கும் போது புத்துணர்ச்சி பெற்று 20 வயது இளைஞனை போல் உணர்கிறேன்.
உதயநிதிக்கு கிடைத்த அமைச்சர் பதவி அவர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். கடந்த தேர்தலில் அவர் ஒற்றை செங்கலை வைத்து மேற்கொண்ட பரப்புரையை மறக்க முடியுமா? இன்னும் எதிர்க்கட்சிகள் புலம்பிக் கொண்டிருக்கின்றன.
அவர், கட்சிப்பணி, ஆட்சிப்பணி இரண்டையும் சிறப்பாக நடத்தி வருகிறார். இளைஞர் அணியில் உள்ளவர்கள் உதயநிதியை போல பணியாற்ற வேண்டும். இல்லம் தோறும் இளைஞர் அணி என்ற தீர்மானத்தை நான் பாராட்டுகிறேன். பிறந்த பலனை நான் அடைந்துவிட்டேன்" என கூறினார்.
திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் பரப்புங்கள்
மேலும் பேசிய தமிழக முதலமைச்சர், "100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? அந்த சமயத்தில் எத்தனை பேர் படித்திருந்தார்கள். இப்போது எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்.
இதை எல்லாம் மாற்றியது யார். இந்த அடக்குமுறைகளை அடக்கி அடித்தளத்தை அமைத்து கொடுத்தது பெரியார், அண்ணா மற்றும் கலைஞர். இதை நாம் தான் மக்களுக்கு மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்த திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் பரப்புங்கள்" எனக் கூறினார்.
பாத யாத்திரை அல்ல.. பாவ யாத்திரை
தொடர்ந்து பேசிய போது, "இந்தியா கூட்டணி என்ற பெயரை கேட்டாலே இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடிக்கவில்லை. இது குடும்ப ஆட்சி தான். எங்கு சென்றாலும் அவர் திமுகவை பற்றி தான் பேசுகிறார். மத்தியில் ஆட்சி செய்வதால் அவரை வெல்ல முடியாது என்று நினைத்து கொண்டிருக்கிறார்.
அமித் ஷா நேற்று தமிழகத்திற்கு வந்தார். அவர் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வரவில்லை. ஏதோ பாத யாத்திரையை தொடங்கி வைக்க வந்துள்ளார். அது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கும், தற்போது மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க நடத்தும் பாவ யாத்திரை" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |