நான் உன்னை கொல்லப் போகிறேன்: பெண்ணை நீரில் மூழ்கடிக்க முயன்ற பிரித்தானியர்..உயிர்தப்பிய சிறுவன்
ஸ்பெயின் நாட்டில் பெண் மற்றும் சிறுவனை கொல்ல முயன்ற பிரித்தானியர் கைது செய்யப்பட்டார்.
நீரில் மூழ்கடிக்க முயன்ற பிரித்தானியர்
ஸ்பெயினின் Costa Blanca சுற்றுலாப் பகுதியில் உள்ள விடுதியில், பிரித்தானியாவைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் தங்கியிருந்தார்.

இவர் பெனிடார்ம் கடற்கரை ஒன்றில், நீந்திக் கொண்டிருந்த பெண்ணை நீரில் மூழ்கடிக்க முயன்றுள்ளார்.
அவரது கழுத்தைப் பிடித்து "நான் உன்னைக் கொல்லப் போகிறேன், நான் உன்னைக் கொல்லப் போகிறேன்" என்று அந்நபர் கத்தியிருக்கிறார்.
அச்சமயம் குறித்த 34 வயது நார்வே பெண்ணின் காதலர் தலையிட்டு அவரை காப்பாற்றியிருக்கிறார். அதன் பின்னர் குறித்த பிரித்தானிய நபர், 5 வயது ஸ்பானிஷ் சிறுவன் ஒருவனின் கழுத்தைப் பிடித்து, மணலில் முகத்தை அழுத்தி கொல்ல முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறுவனின் தாயார் மற்றும் அங்கிருந்த சிலர், விரைந்து வந்து பிரித்தானியரிடம் இருந்து அவனைக் காப்பாற்றினர்.
பின்னர் காவல்துறையினர் குறித்த பிரித்தானியரை கொலை முயற்சி, காயம் ஏற்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்தனர்.
ஆனால், அப்போதும் அவர் வன்முறையாக நடந்துகொண்டதாகவும், காவல்நிலைய அறையில் இருந்த போர்வையைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார் என்று உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில்
இதன் காரணமாக அவர் விலங்கிடப்பட்டு 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவ காரணங்களுக்காக வில்லாஜோயோசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரது மனநல மதிப்பீடு முடியும் வரை அவர் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்தபோதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் தேசிய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இந்தச் சம்பவம் குறித்து, இரு படைகளும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |