ஏற்க முடியாது... அது அவமானம்: விளாடிமிர் புடினை பலி கேட்கும் தீவிர தேசியவாதிகள்
உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விளாடிமிர் புடினுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கெர்சன் தோல்வியை தங்களால் ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள ரஷ்ய போர் ஆதரவு குழுக்கள், விளாடிமிர் புடினை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கவும் கொலை செய்யவும் சூளுரைத்துள்ளனர்.
@Shutterstock
புடினுக்கு கொலை மிரட்டல்
முக்கியமாக, விளாடிமிர் புடினின் மூளை என ரஷ்யாவில் அறியப்படும் அலெக்சாண்டர் டுகின் என்பவரே, புடினின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் எனவும், புடினை கொலை செய்தால் கூட தவறில்லை எனவும் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான 9 மாத போரால் இதுவரை எதையும் ரஷ்யா சாதிக்கவில்லை என குறிப்பிடும் அலெக்சாண்டர் டுகின், முழுமையான தோல்வி என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், உக்ரைனில் கடுமையான தாக்குதல் திட்டத்தை இனி மேல் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் நபர்களில் அலெக்சாண்டர் டுகின் முன்வரிசையில் உள்ளார்.
@Shutterstock
கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறியது, ரஷ்ய பெருமைக்கு கிடைத்த பெரிய ஒரு அடி எனவும் அலெக்சாண்டர் டுகின் குறிப்பிட்டுள்ளார். மேலும், கெர்சனில் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
அரசனை கொன்ற மக்கள்
அத்துடன், ஒரு கதை ஒன்றையும் புடினுக்கு எதிராக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், கடும் வறட்சி காலத்தில் மழையை பெய்விக்காத அரசனை மக்கள் திரண்டு கொல்வதாகவும், அந்த அரசனின் வயிறு பிளக்கப்பட்டது எனவும் டுகின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாம் அந்த தலைவருக்கு மொத்த அதிகாரத்தையும் வழங்கினோம், அவர் நம்மை, மக்களை, நாட்டை இக்கட்டான சூழலில் காப்பாற்றினார். ஆனால் அவரின் கடமையில் இருந்து தவறும் போது மழை பெய்விக்காத அரசனின் நிலை தான் ஏற்படும் என்றார்.
@Shutterstock
கெர்சன் பகுதியை தாரைவார்த்துள்ளது புடின் நிர்வாகம், அதற்கு வருத்தப்படாத பொதுமக்கள் ரஷ்யாவில் வசிக்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையான ரஷ்யர்கள் அல்ல எனவும் டுகின் குறிப்பிட்டுள்ளார்.
டுகின் மட்டுமின்றி, ரஷ்யாவின் தீவிர தேசியவாதிகள் பலரும் கெர்சன் தொடர்பில் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றே கூறப்படுகிறது.