சீனாவில் பள்ளிக் குழந்தைகளின் உணவில் கலக்கப்பட்ட பெயிண்ட்: 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
சீனாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவில் பெயிண்ட் கலக்கப்பட்ட சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி உணவில் பெயிண்ட்
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில், சமையல்காரர்கள் உண்ணத்தகாத பெயிண்ட்டை உணவில் கலந்து குழந்தைகளுக்கு வழங்கியதால், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஈய விஷத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கான்சு மாகாணத்தின் தியான்ஷூயி நகரில் உள்ள பெய்ஷின் மழலையர் பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
விசாரணையில், மழலையர் பள்ளி உணவு மாதிரிகளில் தேசிய பாதுகாப்பு வரம்பை விட 2,000 மடங்கு அதிகமான ஈய அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு
அந்த மழலையர் பள்ளியைச் சேர்ந்த மொத்தம் 233 குழந்தைகளுக்கு இரத்தத்தில் அதிக ஈய அளவு இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் சாப்பிட்ட வேகவைத்த சிவப்பு பேரீச்சம்பழ கேக் மற்றும் சோளம் கலந்த பன் ஆகியவற்றில் இந்த விஷத்தன்மை இருந்துள்ளது.
காவல்துறையின் அறிக்கையின்படி, பள்ளி முதல்வர் சமையலறை ஊழியர்களை ஆன்லைனில் பெயிண்ட் வாங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட பிறகு, காவல்துறையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பொருட்களை தேடி கண்டுபிடித்துள்ளனர்.
அந்த பெயிண்ட் "உண்ணத்தகாதது" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரான திரு. லியு, தனது மகனின் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில் ஈய விஷம் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துமோ என்று பிபிசியிடம் தனது அச்சத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமையலறையில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகளை சீன அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் ஊழியர்கள் பெயிண்ட் நிறமிகளை குழந்தைகளுக்கான உணவில் கலப்பது பதிவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |