அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு., 100 சதவீத வரிவிதிப்பிற்கு சீனா கடும் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிற்கு எதிராக 100 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பை அறிவித்ததைத் தொடர்ந்து, சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“இது இரட்டை நிலைப்பாட்டின் சிறந்த உதாரணம்” என சீன வர்த்தக அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1 முதல் இந்த வரிவிதிப்பு அமுலுக்கு வரும் வகையில் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பிற்கு , சீனாவின் “மிகுந்த தாக்கம் ஏற்படுத்தும்” அரிதான கனிம ஏற்றுமதி கட்டுப்பாடுகளை காரணமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பை ரத்து செய்வதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செப்டம்பர் மாதத்திலிருந்து அமெரிக்கா பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சீன அரசு குற்றம்சாட்டியுள்ளது.
“இந்த நடவடிக்கைகள் சீனாவின் நலன்களை பாதித்துள்ளதுடன், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையின் சூழ்நிலையை சீர்குலைத்துள்ளன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பதில் அறிக்கையில், “தொடர்ந்து அதிக வரிவிதிப்புகளை எச்சரிக்கையாக பயன்படுத்துவது, சரியான அணுகுமுறை அல்ல” எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலைமை, அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த அறிவிப்பு, உலகளாவிய பொருளாதார சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |