கிரிப்டோகரன்சியை உள்ளூர் பணமாக மாற்றலாம்... சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஆசிய நாடொன்று
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் கிரிப்டோகரன்சிகளை உள்ளூர் பணமாக மாற்றி செலவு செய்ய அனுமதிக்கும் 18 மாத பைலட் திட்டத்தை தாய்லாந்து தொடங்க உள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
நாட்டின் முக்கியமான சுற்றுலாத் துறையைப் புத்துயிர் பெறச் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. அதிக பட்சமாக 550,000 baht வரையில், அதாவது 16,949 டொலர் வரையில் கிரிப்டோகரன்சிகளை மாற்றலாம்.
மோசடியைத் தடுக்கவே இந்த வரம்பு என நிதி அமைச்சக நிரந்தர செயலாளர் லாவரோன் சாங்ஸ்னிட் விளக்கமளித்துள்ளார். ஆனால், சோதனை காலம் முடிந்த பிறகு வரம்பை மறு மதிப்பீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான தாய்லாந்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வரும் நிலையிலேயே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
வருவாய்
தாய்லாந்தில் செயல்படும் கிரிப்டோ பரிமாற்ற தளங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் மாற்றங்களைச் செய்ய முடியும். பின்னர் பணம் ஒன்லைன் வாலட் பயன்பாடுகளுக்கு மாற்றப்படுகிறது, இதனால் உள்ளூர் வணிகங்களுக்கு பணம் செலுத்த முடியும்.
2019ல் பெருந்தொற்றுக்கு முன்னர் 39.9 மில்லியன் சுற்றுலா பயணிகள் தாய்லாந்து விஜயம் செய்துள்ளனர். இதனால் 58.86 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 33 மில்லியன் என சரிவடைந்த நிலையிலேயே தாய்லாந்து நிர்வாகம் புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |