இனி சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவை
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசித்து வரும் யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவை சென்னையில் இருந்து வருகிற 16 ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் இருந்து கொழும்பு நகருக்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விமான சேவை தொடங்க வேண்டுமென தமிழர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, ஏர் இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் விமான சேவை நிறுத்தப்பட்டு, கொரோனா தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் சேவையை தொடங்கியது.
அதன்படி, நிறுத்தப்பட்ட விமான சேவையை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியில் இருந்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் தொடங்கியது. வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், சனி என 4 நாட்கள் என இயக்கப்பட்டது.
இந்த விமான சேவை, இந்தியா மற்றும் யாழ்ப்பாணத்தில் பெருமளவில் வரவேற்கப்பட்டது.பின்னர், சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவையை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து, வருகிற 16-ந்தேதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானம் இயக்க இருப்பதாக அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சேவையானது, தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும். பின்பு, பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |