இஸ்ரேலை தண்டிப்பது கடமை... அரேபிய நாடுகளின் ஆதரவு திரட்டும் ஈரான்
தெஹ்ரானில் ஹமாஸ் தலைவரை படுகொலை செய்துள்ளதற்கு இஸ்ரேலை தண்டிப்பது என்பது ஈரானின் கடமை என அந்த நாடு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை அவசர கூட்டம்
குறித்த முடிவை ஈரானுக்கான வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடமும் வெளிப்படையாக அந்த நாடு அறிவித்துள்ளது. ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை என்பது விதிகளை மீறிய நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள ஈரான்,
இது சாகச நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது. புதன்கிழமை அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள ஈரான், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள அரபு நாடுகளின் ஆதரவையும் திரட்டும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் அரபு நாடுகளின் தலைவர்கள் பலர் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டிக்க தயாராக உள்ளனர், இருப்பினும் இந்த விவகாரத்தில் ஈரான் நிதானத்தை காட்ட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு என அறியப்படும் OIC-ன் சிறப்பு அவசர கூட்டம் ஈரானின் கோரிக்கையை ஏற்று சவுதி அரேபியாவில் ஜெத்தா நகரில் அமைந்துள்ள தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதனிடையே, ஈரானின் எத்தகைய நடவடிக்கையானாலும் எதிர்கொள்ள தாங்கள் தயார் என இஸ்ரேல் தரப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளின் ஆதரவை திரட்ட இதற்கு முன்னர் ஈரான் முன்னெடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.
ராணுவ நடவடிக்கை
இந்த நிலையில் கடந்த மே மாதம் ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்டார். இந்த நிலையில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதுடன், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நிதானம் காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், ஞாயிறன்று மதியத்திற்கு மேல் இருந்தே தெஹ்ரான் விமான நிலையத்திற்கான விமான என்ணிக்கையை ஈரான் குறைத்துக் கொண்டுள்ளது. ராணுவ நடவடிக்கையின் போது பயணிகல் விமானங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக ஈரான் அஞ்சுகிறது.
கடந்த 2020 ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் போது ஈரான் தவறுதலாக உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. அதில் 176 பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக ரஷ்யா தனது ஆதரவை ஈரானுக்கு தெரிவித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கை, ஹமாஸ் தலைவரை தெஹ்ரானில் வைத்து படுகொலை செய்தது என ரஷ்யா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |