ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை: பயங்கரவாத குழுவில் பட்டியலிட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரான்ஸ் அழைப்பு
ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழுவை தீவிரவாத குழுவாக ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை பிரான்ஸ் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தீர்மானம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய ராணுவ தாக்குதலில், ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழு முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அத்துடன் உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு போர் குற்றங்களுக்கு வாக்னர் கூலிப்படையே முக்கிய காரணம் என்று சர்வதேச நாடுகளால் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
AFP
இந்நிலையில், ரஷ்யாவின் தனியார் வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை பிரான்ஸ் தேசிய சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் சட்டமியற்றும் உறுப்பினர் பெஞ்சமின் ஹடாட்(Benjamin Haddad) தெரிவித்த கருத்தில், வாக்னர் படைக்குழு எங்கு சென்றாலும் அங்கு அத்துமீறல்கள், அராஜகங்கள் மற்றும் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.
எனவே இந்த தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களையும் வாக்னர் படைக்குழுவிற்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ள வைத்து, அதனை தீவிரவாத குழுவில் பட்டியலிட வைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
Reuters
நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி
ரஷ்யாவின் வாக்னர் படைக்குழுவை தீவிரவாத பட்டியலில் சேர்க்க வைக்கும் பிரான்ஸ் தேசிய சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சிறப்பு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தின் ஒவ்வொரு உருவாக்கமும அழிக்கப்பட்டு, ஒவ்வொரு பயங்கரவாதியும் தண்டிக்கப்பட வேண்டும் என உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
president.gov.ua