படுகொலை முயற்சியின் மூளை இவர்கள் தான்: பாகிஸ்தான் பிரதமர் மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டதாக பிரதமர் உட்பட மூன்று பேர் மீது பகிரங்கமாக இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான், இன்று அதிகாலை தம் மீதான படுகொலை முயற்சி பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அவர் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோரின் பெயரையும் கூறியுள்ளார்.
இம்ரான் கான் வியாழக்கிழமை பிற்பகல் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள வஜிராபாத்தில் தனது பேரணியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததால் லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இராணுவ ஸ்தாபன ஆதரவு மத்திய அரசாங்கத்திற்கு எதிராக இஸ்லாமாபாத்திற்கு அவர் நடந்துகொண்டிருந்த அணிவகுப்பின் போது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொலை முயற்சியில் அவரது ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
இம்ரான் கான் தற்போது நலமாக இருப்பதாகவும், அவரது காயம் ஆபத்தானதாக இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இம்ரான் கானிடமிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணா சனாவுல்லா மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோருடைய உத்தரவின் பேரில் தான் இந்த 'படுகொலை முயற்சி நடந்தது என்று அவர் நம்புவதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, சதி செய்ததாகக் கூறப்படும் மூன்று பேரையும் ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பிடிஐயின் பொதுச்செயலாளர் ஆசாத் உமர் கோரினார்.
இக்கட்சியின் மற்றோரு உறுப்பினர் மியான் அஸ்லம் இக்பால், இன்று நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு, கான் சாஹாப்பின் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த மூன்று பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, இம்ரான் கான் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.