இந்தியாவின் அந்த ஒற்றை தடை உத்தரவு... உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்
பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா அதிரடியாக தடை விதித்துள்ள நிலையில், இது உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்படும் அபாயத்திற்கு இட்டுச்செல்லும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி
உள்ளூர் சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கம் ஜூலை 20ம் திகதி பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
@getty
இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரகமும், எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அரிசி விலை 40 சதவீதம் வரையில் அதிகரிக்கலாம் என உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மட்டும் உலக அரிசி ஏற்றுமதியில் 40 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த வரிசையில் உள்ளனர்.
இதில் அரிசி வாங்கும் முக்கிய நாடுகளில் சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் நைஜீரியா உள்ளன. மேலும் உள்ளூரில் பற்றாக்குறை ஏற்படும் போது இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளும் அரிசி இறக்குமதி செய்கின்றன.
@AFP
கடந்த ஆண்டில் மட்டும் 140 நாடுகளுக்கு 22 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 6 மில்லியன் டன் மலிவான வெள்ளை அரிசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தகத்தில் 70 சதவீதம்
ஆனால் உலக வர்த்தகத்தில் 70 சதவீதம் ஆதிக்கம் செலுத்துவது இந்த வெள்ளை அரிசி என்றே கூறுகின்றனர். தற்போது இந்த வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளது.
மேலும், இந்தியாவில் தற்போது 41 மில்லியன் டன் அரிசி சேமிப்பில் உள்ளது. இருப்பினும், கடந்த ஓராண்டாக இந்தியாவில் உணவு பண்டங்களுக்கான விலை உயர்வு மக்களை நெருக்கி வருகிறது.
கடந்த அக்டோபரில் இருந்தே அரிசி விலையில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உலக உணவுப் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் அரிசி ஏற்றுமதி தடைகளை இந்தியா தவிர்க்க வேண்டும் என்றே பலரது கோரிக்கையாக உள்ளது.
@getty
ஏறக்குறைய 42 நாடுகள் அரிசி இறக்குமதிக்காக இந்தியாவை நம்பியுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகளில் அரிசி இறக்குமதி தொடர்பில் இந்தியாவின் சந்தைப் பங்கு 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
தற்போது இந்தியாவின் இந்த ஒற்றை முடிவால், மலிவான வெள்ளை அரிசியை நம்பியிருக்கும் பல்வேறு நாடுகள் உணவு நெருக்கடி அபாயத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |