எந்த நேரத்திலும் தாக்கலாம்... அதிகரிக்கும் போர்ப்பதற்றம்: அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு ஒன்றாக இணைந்து எந்த நேரத்திலும் இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கலாம் என்று G7 உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்கூட்டியே தாக்குதல்
இஸ்ரேல் தரப்பு சொந்த மண்ணில் தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் ஈரான் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்த அவசர கூட்டம் ஒன்றில் நாட்டின் முதன்மை உளவு அமைப்புகளான மொசாத் மற்றும் ஷின் பெட் ஆகியவையின் தலைவர்களும் பாதுகாப்பு அமைச்சர், ராணுவத் தளபதி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஈரான் ஆதரவுடன் 1980களில் நிறுவப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பானது மத்திய கிழக்கில் ஈரானின் முதன்மையான மறைமுக பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறது. ஈரானின் புரட்சிகர படையின் நிதியுதவி மற்றும் ஆயுத உதவியுடன் ஈரானின் முக்கிய சித்தாந்தத்தையே பின்பற்றி வருகிறது.
அத்துடன் முதன்மையாக லெபனானின் ஷியைட் முஸ்லீம் மக்களிடமிருந்து மட்டுமே ஆட்சேர்ப்பும் நடத்துகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக இனி ஹிஸ்புல்லா ஆட்டத்தைத் துவங்கும் என்றும், ராணுவ முகாம் மட்டுமின்றி, உள்கட்டமைப்பையும் குறிவைக்கும் என தெரிவித்துள்ளது.
ஜூலை 30ம் திகதி ஹிஸ்புல்லாவின் ராணுவத் தளபதி ஒருவரை இஸ்ரேல் படுகொலை செய்த நிலையிலேயே நெருக்கடி அதிகரித்தது. அத்துடன் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டதும் இஸ்ரேல் மீதான கோபத்தை அதிகரிக்க செய்தது.
பயணிகள் விமான நிலையம்
ஆனால் ஹனியே படுகொலையில் இஸ்ரேலின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டாலும், இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. 2006ல் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்த போரில் லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஒரே பயணிகள் விமான நிலையத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது.
ஆனால் தற்போதைய சூழல் பல்வேறு நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளதுடன், தங்கள் குடிமக்களை லெபனானில் இருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறப்படுகிறது.
பல நாடுகள் விமான சேவைகளை ரத்து செய்துள்ளதும், அக்டோபர் வரையில் சில நிறுவனங்கள் தங்கள் விமான சேவைகளை ரத்து செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |