60,000 ரிசர்வ் வீரர்கள்... காஸா சிட்டி மீது படையெடுப்பைத் தொடங்கிய இஸ்ரேல்
60,000 ரிசர்வ் வீரர்களுடன் காஸா சிட்டி மீதான படையெடுப்பின் முதற்கட்டத்தை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியுள்ளது.
வேருடன் சாய்ப்போம்
காஸா சிட்டியின் புறநகர் பகுதியின் கட்டுப்பாடு தற்போது தங்கள் வசம் சிக்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் அறிவித்துள்ளார்.
இப்பகுதியானது ஹமாஸ் படைகளின் கடைசி கோட்டைகளில் ஒன்றாக இருந்தது. ஹமாஸ் படைகளை மொத்தமாக வேருடன் சாய்ப்போம் என பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் பிதன்கிழமை முழக்கமிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, இஸ்ரேல் இராணுவத்தின் 60,000 ரிசர்வ் வீரர்களுடன் காஸா சிட்டி மீதான படையெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். காஸா சிட்டியைச் சுற்றியுள்ள ஜபாலியா மற்றும் Zeitoun மாவட்டங்களில் இராணுவம் ஏற்கனவே ஆரம்ப நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலின் இந்த கொடூர நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவிருப்பதால், பெஞ்சமின் நெதன்யாகு அரசு காஸா சிட்டி மீதான படையெடுப்பை தொடங்கியுள்ளது.
சிறந்த வழி
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். மட்டுமின்றி, காஸா சிட்டிக்குள் இஸ்ரேல் இராணுவம் நுழைவதை உலகத் தலைவர்கள் பலர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் காஸா சிட்டியை மொத்தமாக கைப்பற்றுவதால் மட்டுமே ஹமாஸ் படைகளை வென்றுள்ளதாக அறிவிக்க முடியும் என பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
காஸா மீதான தாக்குதலை விரிவுபடுத்துவதே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி என்று கடந்த வாரம் அவர் கூறியிருந்தார். மட்டுமின்றி, காஸா சிட்டியிலும் அல்-மவாசியில் உள்ள கடலோர முகாம்களிலும் ஹமாஸ் படைகளை தோற்கடிப்பதைத் தவிர வேறு வழியில்லை,
இஸ்ரேல் தொடங்கிய வேலையை முடிக்க வேண்டும் என்றே நெதன்யாகு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், காஸா சிட்டியில் இருந்து எஞ்சிய ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து கூட்டமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |