அடுத்த வாரம் மரண தண்டனை: ஏமன் நாட்டில் திகிலில் கேரள செவிலியர்
ஒரு நல்ல எதிர்காலத்துக்காக ஆசைப்பட்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதால் அவரும் இந்தியாவிலிருக்கும் அவரது குடும்பத்தினரும் திகிலில் உறைந்திருக்கிறார்கள்.
ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற கேரளப்பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (34). கேரளாவில் செவிலியர் பணி செய்ய அவரது சான்றிதழ் தகுதி பெறாததால், வெளிநாடொன்றில் வேலை தேடும் முயற்சியில் இறங்க, 2008ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் அவருக்கு வேலை கிடைத்தது.
2011ஆம் ஆண்டு நாடு திரும்பிய நிமிஷா, தன் தாயார் தனக்காக மணமகனான பார்த்துவைத்திருந்த டோமி தாமஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, கணவருடன் ஏமனுக்குத் திரும்பினார். 2012ஆம் ஆண்டு தம்பதியருக்கு பெண் குழந்தை ஒன்று பிறக்க, செலவுகளை சமாளிப்பது கஷ்டமாயிற்று. ஆகவே, 2014ஆம் ஆண்டு மகளுடன் கேரளாவுக்குத் திரும்பிவிட்டார் தாமஸ்.
ஆனால், 2017ஆம் ஆண்டு, தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்த தாமஸை ஒரு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ’கேரள செவிலியரான நிமிஷா, தன் கணவரைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியதாக ஏமனில் கைது’ என்று அந்த செய்தி கூற, குழப்பமடைந்தார் தாமஸ்.
நடந்தது என்ன?
விடயம் என்னவென்றால், செவிலியராக பணி செய்ததில் கிடைத்த வருவாய் போதுமானதாக இல்லாததால், சொந்தமாக கிளினிக் துவங்க முடிவு செய்துள்ளார் நிமிஷா. ஆனால், ஏமன் நாட்டில் சொந்தமாக தொழில் துவங்கவேண்டுமானால், உள்ளூர் கூட்டாளர் ஒருவர் தேவை.
அப்போது, நிமிஷாவுக்கு உதவ முன்வந்துள்ளார் ஏமன் நட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவர். மஹ்தியின் உதவியுடன் கிளினிக் துவங்கப்பட்டு எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருந்திருக்கிறது.
ஆனால், மஹ்தி தனக்கு தொல்லை கொடுப்பதாக கணவரிடம் புகார் கூறியுள்ளார் நிமிஷா. தன்னை அவர் அடிப்பதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாகவும் நிமிஷா புகார் கூற, தாமஸ் அது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளார்.
மஹ்தி, நிமிஷா தன் மனைவி என்பதற்கான போலியான ஆதாரங்களை உருவாக்கியதுடன், கிளினிக்கில் கிடைக்கும் பணத்தையும் எடுத்துக்கொள்ளத் துவங்கியுள்ளார்.
நிமிஷாவை அடித்துத் துன்புறுத்தியதுடன், அவரது பாஸ்போர்ட்டையும் மஹ்தி பறித்துவைத்துக்கொள்ள, எப்படியாவது தனது பாஸ்போர்ட்டை மீட்டு, தப்பி வந்துவிடவேண்டும் என திட்டமிட்ட நிமிஷா, மஹ்திக்கு மயக்க ஊசி போட்டிருக்கிறார்.
ஆனால், மயக்க மருந்தின் அளவு அதிகமாகவே, மஹ்தி உயிரிழந்துள்ளார். ஒரு தவறு அடுத்தடுத்த தவறுகளுக்கு வழி வகுக்க, நிமிஷா மஹ்தியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அந்த உடல் பாகங்களை தண்ணீர் தொட்டி ஒன்றிற்குள் வீசியிருக்கிறார். ஆனால், பொலிசில் சிக்கிக்கொண்டார்.
நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து நிமிஷா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட, 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி, அதை ஏமன் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஏமன் நாட்டில், இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால், அச்சட்டப்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இரத்தப்பணம் என்னும் ஒரு தொகையை செலுத்தினால், அவர்கள் குற்றவாளியை மன்னிப்பதாக அறிவிப்பார்கள்.
ஆக, நிமிஷா தங்களுக்கு 1.5 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் என மஹ்தியின் குடும்பத்தினர் கேட்க, நிமிஷாவின் தாயாகிய பிரேமா குமாரி (57), ஏமன் சென்று தன் மகள் சார்பில் மஹ்தி குடும்பத்திடம் மன்னிப்புக் கோர விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
பிரச்சினை என்னவென்றால், நிமிஷா அடைக்கப்பட்டுள்ள சிறை இருக்கும் ஏமனின் தலைநகரான Sanaa, ஈரான் ஆதரவு ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அங்கு இந்திய தூதரகம் இல்லாததாலும், இரு நாடுகளுக்குமிடையில் தூதரக உறவுகள் இல்லாததாலும், உள்நாட்டுப் போர் பிரச்சினைகள் இருப்பதாலும், பாதுகாப்பு கருதி நிமிஷாவின் தாய் அங்கு செல்ல இந்திய அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துவிட்டார்கள்.
Our response to media queries regarding the case of Ms. Nimisha Priya:https://t.co/DlviLboqKG pic.twitter.com/tSgBlmitCy
— Randhir Jaiswal (@MEAIndia) December 31, 2024
நிமிஷாவை விடுவிப்பதற்காக இந்திய அரசு ஏமன் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்திவரும் நிலையில், அடுத்த வாரம், அதாவது, ஜூலை மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நிமிஷாவும் இந்தியாவிலிருக்கும் அவரது குடும்பத்தினரும் திகிலில் உறைந்திருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |