இன்றே கடைசி... வீதியில் இறங்கி போராடும் மக்களுக்கு மிரட்டல் விடுத்த அரசு
வீதியில் இறங்கிப் போராட இனி எவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும், இன்றே கலவரங்களுக்கு இறுதி நாள்
உங்கள் மரியாதையை விற்காதீர்கள், உங்களைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினரின் முகத்தில் அறையாதீர்கள்
ஈரானில் வீதியில் இறங்கி போராடும் மக்களுக்கு, நாட்டின் மிகவும் பலம் பொருந்திய புரட்சிகர காவலர்கள் படை கடும் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு சனிக்கிழமை தான் கடைசி நாள் என்று எச்சரித்துள்ளனர். இதனால் பொலிசார் மற்றும் ராணுவத்திற்கு உதவியாக ஈரானின் மிகவும் பலம் பொருந்திய புரட்சிகர காவலர்கள் படை களமிறங்கும் என்றே அஞ்சப்படுகிறது.
@reuters
கடந்த மாதம் 22 வயதான குர்திஷ் இளம் பெண் மஹ்சா அமினி சிறப்புப் பொலிஸாரின் காவலில் கொல்லப்பட்டதிலிருந்து ஈரானில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1979ல் நடந்த புரட்சிக்கு பின்னர் மிகவும் துணிச்சலான போராட்டமாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான், புரட்சிகர காவலர்கள் படையின் தலைவர் Hossein Salami பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வீதியில் இறங்கிப் போராட இனி எவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும், இன்றே கலவரங்களுக்கு இறுதி நாள் எனவும் அவர் கடுமையான வார்த்தைகளால் மிரட்டியுள்ளார்.
ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசுகளின் தூண்டுதலால் ஈரானில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. சலாமியும் அதையே குறிப்பிட்டுள்ளதுடன், இது வேரறுக்கப்படவேண்டிய தருணம் எனவும்,
@reuters
அமெரிக்காவுக்கு உங்கள் மரியாதையை விற்காதீர்கள், உங்களைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினரின் முகத்தில் அறையாதீர்கள் எனவும் சலாமி கொந்தளித்துள்ளார்.
இருப்பினும் மக்கள் சனிக்கிழமையும் திரளாக வீதியில் களமிறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இதுவரை களமிறக்கப்படாத புரட்சிகர காவலர்கள் படை போராட்டங்களை ஒடுக்க களமிறக்கப்பட்டால், பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்றே அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.