3 நிமிடத்தில் பல கோடி மதிப்பிலான ஓவியங்கள் திருட்டு: இத்தாலி கொள்ளையர்கள் கைவரிசை
இத்தாலி அருங்காட்சியகத்தில் பல கோடி மதிப்புள்ள ஓவியங்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருங்காட்சியகத்தில் திருட்டு
வடக்கு இத்தாலியின் பார்மா நகருக்கு அருகே அமைந்துள்ள மக்னானி-ரோக்கா அறக்கட்டளை அருங்காட்சியகத்தில் புகுந்து அடையாளம் தெரியாத திருட்டு கும்பல் உலக புகழ்பெற்ற 3 அரிய ஓவியங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மார்ச் 22ம் திகதி நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில், திருட்டு கும்பல் வெறும் 180 வினாடிகளுக்குள் பியர்-ஆகஸ்டு ரெனோயர், பால் செசான், ஹென்றி மாட்டிஸ் ஆகிய மூன்று ஓவியங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருடப்பட ஓவியங்களின் மதிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவரவில்லை.
ஆனால் புலனாய்வாளர்கள் செய்த மதிப்பிட்டின் படி, திருடப்பட்ட ஓவியங்கள் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கலை வரலாற்றாசிரியரான லூய்கி மக்னானி என்பவரின் அரிய சேகரிப்புகளை பாதுகாக்கும் பொருட்டு 1977ம் ஆண்டு மக்னானி-ரோக்கா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
இங்கு ஆல்பிரக்ட் டியூரர், பீட்டர் பால் ரூபென்ஸ், அந்தோனி வான் டைக் மற்றும் பிரான்சிஸ்கோ கோயா போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கலைத் திருட்டு
ஐரோப்பாவில் கடந்த சில காலமாக கலைப் பொருட்கள் தொடர்பான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த அக்டோபரில் பாரிஸில் அமைந்துள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் 76 மில்லியன் பவுண்டு மதிப்பிலான நகைகள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |