போலந்து இளைஞர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி: டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு!
அனைத்து ஆண்களுக்கும் இராணுவ பயிற்சி திட்டத்தை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி
போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, ஐரோப்பாவில் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை தூண்டி உள்ளது.
இதன் மூலம் போலந்து ராணுவத்தின் எண்ணிக்கையை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ராணுவ பயிற்சியில் பெண்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சாத்தியமான அச்சுறுத்தல்களைக் எதிர்கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டஸ்க் அவர்களின் நாடாளுமன்ற உரை
"போலந்தில் உள்ள ஒவ்வொரு வயது வந்த ஆணுக்கும் விரிவான ராணுவப் பயிற்சி அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போர் ஏற்பட்டால், ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும். இதன் மூலம் நமது ராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ பலம் அதிகரிக்க வேண்டிய அவசியம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் ராணுவ பலத்தை சுட்டிக்காட்டிய அவர், போலந்து ராணுவத்தின் எண்ணிக்கையை தற்போதுள்ள 2 லட்சம் வீரர்களில் இருந்து 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
"ரிசர்வ் வீரர்கள் உட்பட, போலந்தில் அரை மில்லியன் ராணுவ வீரர்கள் இருக்க வேண்டியது அவசியம்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐரோப்பிய பாதுகாப்புக்கான பிரான்சின் திட்டம்
ஐரோப்பாவை அணு ஆயுத பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் பிரான்சின் திட்டத்தை போலந்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார்.
"இந்த ஆயுதங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அதன் தாக்கம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |