ஆப்பிரிக்காவுக்கு வெளியே... ஐரோப்பிய நாடொன்றில் உறுதி செய்யப்பட்ட மிக ஆபத்தான தொற்று
ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக ஐரோப்பிய நாடொன்றில் மிக ஆபத்தான வகை mpox அல்லது குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வீடனில் mpox
ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் mpox அல்லது குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அந்த நாட்டின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் மிக ஆபத்தான mpox Clade 1 வகை பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் அந்த ஸ்வீடன் நாட்டவர் தங்கியிருந்ததாகவும், இதனால் அவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பானது mpox அல்லது குரங்கம்மை பாதிப்பினை பொது சுகாதார அவசர நிலை என அறிவித்த சில மணி நேரங்களில் ஐரோப்பாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு பரவிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 450 பேர் மரணமடைந்தனர். அதன் பின்னர் மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் பரவியது.
தற்போது ஸ்வீடனில் பாதிப்புக்கு உள்ளான நபர் Stockholm பகுதியில் சிகிச்சை நாடியுள்ளார். இதனால் அங்குள்ள மக்களுக்கு குரங்கம்மை பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றே சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளான பகுதியில் அந்த நபர் தங்கியிருந்த காரணத்தாலையே, தற்போது அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஸ்வீடன் சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.
mpox அல்லது குரங்கம்மை தொற்றானது உடல் ரீதியான நெருக்கம், பாதிக்கப்பட்டவர்கலுடன் உரையாடுதல் அல்லது அவர்களின் மூச்சுக்காற்றை சுவாசித்தல் உள்ளிட்டவையால் அடுத்தவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது.
ஸ்வீடன் எச்சரிக்கை
காய்ச்சல் அறிகுறிகள் முதலில் காணப்படும், பின்னர் தோல் புண்கள் ஏற்படும். மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் குரங்கம்மை பாதிப்பு மிகவும் பொதுவானது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆனால் தற்போது ஆபத்தான mpox Clade 1b வகை பரவுவதால், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த வகை முதன்முதலில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் உறுதி செய்யப்பட, தற்போது புருண்டி, கென்யா மற்றும் ருவாண்டா நாடுகளிலும் பரவியுள்ளது.
இதே வகை பாதிப்பு தற்போது ஸ்வீடனில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை நாடுகளுக்கும் ஸ்வீடன் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், துரிதமாக செயல்பட கோரிக்கை விடுத்துள்ளது.
mpox Clade 1b வகை பாதிப்பால் ஆப்பிரிக்க நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது போன்று ஐரோப்பாவில் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இங்குள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்துறை முதன்மையான காரணம் என்றும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 6 முதல் 13 நாட்களுக்கு பின்னரே அறிகுறிகள் தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |