சிறார்கள் அதிக ஆபத்தில்... 600 தொடும் இறப்பு எண்ணிக்கை: தடுப்பூசிக்காக காத்திருக்கும் ஒரு நாடு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் Mpox பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளும் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிகளுக்காக அந்த நாடு காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறப்பு எண்ணிக்கை
ஜப்பான் மற்றும் அமெரிக்கா Mpox தடுப்பூசிகளை காங்கோ நாட்டுக்கு அளிக்க முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் காங்கோவில் 16,000 என பதிவாகியிருந்த Mpox பாதிப்பு எண்ணிக்கை சில நாட்களில் 16,700 என அதிகரித்துள்ளது.
அத்துடன் இறப்பு எண்ணிக்கையும் 548ல் இருந்து 570 என உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் சாமுவேல் கம்பா தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட நாடுகள் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். Mpox பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த புதன்கிழமை உலகம் முழுவதும் சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது.
4 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி
இதனிடையே, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் மற்றும் ஆசிய நாடான பாகிஸ்தானிலும் Mpox பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளான புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் ஜூலை மாதத்தில் இருந்து பாதிப்பு உறுதி செய்யபப்ட்டுள்ளது.
இந்த நிலையில் Mpox தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டிற்கு 50,000 தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. ஜப்பானும் 3.5 மில்லியன் தடுப்பூசிகளை சிறார்களுக்கு என மட்டும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இதனையடுத்து, 3.5 மில்லியன் சிறார்கள் உட்பட 4 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்க காங்கோ தயாராகி வருகிறது. 100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காங்கோவில் 26 மாகாணங்களிலும் Mpox பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |