ரஷ்யாவிற்கு நெருக்கடி அளிக்கும் இந்தியா... நேட்டோ தலைவர் வெளியிட்ட விடயம்
ரஷ்யா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது அமெரிக்காவின் வரி விதிப்பு உரிய பலனைத் தருவதாக நேட்டோ தலைவர் தெரிவித்துள்ளார்.
புடினிடம் இந்தியா
இந்தியா மீதான வரி விதிப்பு ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேட்டோ தலைவர் மார்க் ரூட் தெரிவிக்கையில், உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் திட்டம் என்ன என்பது தொடர்பில் விளாடிமிர் புடினிடம் இந்தியா தற்போது விளக்கம் கேட்கத் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியை ட்ரம்ப் நிர்வாகம் விதித்தது. அத்துடன் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மேலும் 25 சதவீத வரியை இந்தியா மீது திணிக்கப்பட்டது.
கடைசியாக செப்டம்பர் 17 ஆம் திகதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்திய பிரதமர் மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியாவின் முழு ஆதரவு இருப்பதாகவே தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1 ஆம் திகதி SCO மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, ஒரே வாகனத்தில் பயணித்த புடினும் மோடியும் சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யா மீது தடைகள்
இதனிடையே, ரஷ்ய எண்ணெய் வாங்கும் சீனா மற்றும் இந்தியா மீது 50 முதல் 100 சதவீத வரி விதிக்க நேட்டோ நாடுகள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் இந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தார்.
நேட்டோ நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், ரஷ்யா மீது தடைகள் விதிக்க தாம் தயார் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என மார்க் ரூட் கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |