இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளமும் தடை
இந்தியாவில் தயாரிக்கப்படும் MDH, Everest மசாலா பொருட்கள் விற்பனை செய்யவும் இறக்குமதி செய்யவும் நேபாளம் தடை விதித்துள்ளது.
தரம் குறைந்திருக்கும் காரணத்தின் அடிப்படையில் MDH நிறுவனத்தின் மெட்ராஸ் கறி பொடி, சாம்பார் மசாலா பொடி, மிக்ஸ்டு மசாலா கறி பவுடர் மற்றும் Everest நிறுவனத்தின் மீன் கறி மசாலா போன்ற 4 மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 4 மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு கலப்பு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட கூடுதலாக இருப்பதாகவும், இது உடல்நலனுக்கு ஆபத்து என்பதால் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாகவும் நேபாள உணவு கட்டுப்பாட்டு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அத்துடன் சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த 4 மசாலா பொருட்களை உடனடியாக திரும்ப பெறவும் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவில் உற்பத்தியாகும் பல்வேறு நிறுவன மசாலாக்களின் தரத்தை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக 2025ம் ஆண்டில் இந்திய மசாலா பொருட்களின் ஏற்றுமதி 40 சதவிகிதம் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.