17 வயது கர்ப்பிணி பெண் உயிரிழப்பு காரணமான இந்தியரை அமெரிக்காவை விட்டு வெளியேற்றுங்கள்: தாய் வேண்டுகோள்
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற கார் விபத்தில் 17 வயது ஆஷ்லி ஹோம்ஸ் என்ற கர்ப்பிணி பெண்ணும் மற்றும் அவரது கருவில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் இந்தியரான 33 வயது தர்செம் சிங் என்ற நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 16ம் திகதி நடைபெற்ற இந்த விபத்தின் போது, 17 வயது கர்ப்பிணி ஆஷ்லி ஹோம்ஸ் மற்றும் வாகனத்தை ஓட்டிய தர்செம் சிங் இருவரும் ரேஞ்ச் ரோவர் காரில் பயணித்துள்ளனர்.
அப்போது அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் கார் செல்வதை கண்ட காவல் அதிகாரிகள் அந்த காரை மடக்கி பிடிக்க துரத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினர் துரத்துவதை அறிந்த தர்செம் சிங் சிக்கி கொள்ளாமல் இருக்க காரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தியுள்ளார்.
அப்போது வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு முறை சுழன்று தரையில் நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 17 வயது ஆஷ்லி ஹோம்ஸ் மற்றும் அவரது கருவில் இருந்த குழந்தை இருவரும் உயிரிழந்தனர்.
கிடைத்த தகவலின் படி, 17 வயது ஆஷ்லி ஹோம்ஸ் வயிற்றில் இருந்த குழந்தைக்கு தர்செம் சிங் தான் தந்தை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள தர்செம் சிங் மீது, தவறான முறையில் மரணத்தை ஏற்படுத்துதல், அஜாக்கிரதையாக கொலை மற்றும் வாகன விபத்து ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
தாயின் கோரிக்கை
இந்நிலையில், சமீபத்தில் உயிரிழந்த 17 வயது ஆஷ்லி ஹோம்ஸின் தாயார் முன் வைத்த கோரிக்கையில், தன்னுடைய மகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த நபரை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டவிரோதமாக கலிபோர்னியா வழியாக அமெரிக்காவுக்குள் கடந்த 2017 ஆண்டு நுழைந்த தர்செம் சிங்கிற்கு எதிரான விசாரணை ஆகஸ்ட் 17 முதல் 21 வரை நடைபெற உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |