எங்கள் அயலவர்கள் எங்களை சடலமாகப் பார்க்க விரும்புகிறார்கள்: ஜெலென்ஸ்கி உருக்கம்
உக்ரைன் மீதான படையெடுப்பு 25ம் நாளை எட்டியுள்ள நிலையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி காணொளி வாயிலாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
ஏற்கனவே பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்ற அவைகளில் காணொளி வாயிலாக உரையாற்றி ஆதரவை கோரியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
இந்த நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பை இரண்டாம் உலகப் போருடன் ஒப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் படையெடுப்பு என்பது வெறும் ராணுவ நடவடிக்கை அல்ல எனவும், அப்பாவி மக்கள் மீது ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தும் போர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது எங்கள் மக்கள், எங்கள் குழந்தைகள், குடும்பங்கள், மாநிலம், நகரங்கள், கலாச்சாரங்கள் மற்றும் அவர்களை உக்ரேனியர்கள் என பெருமைபட வைக்கும் அனைத்தையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
102 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் ஒரு பிப்ரவரி 24ம் திகதி தான் நாஜி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அதே பிப்ரவரி 24ம் திகதி தான் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்துள்ளது என்றார் ஜெலென்ஸ்கி.
இந்த இக்கட்டான தருணத்தில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிரான உக்ரேனிய மக்களின் போராட்டத்திற்கு உதவுமாறு அவர் இஸ்ரேலை வலியுறுத்தினார். மேலும், மறைந்த இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி,
"நாங்கள் வாழ விரும்புகிறோம், ஆனால் எங்கள் அயலவர்கள் எங்கள் சடலங்களைப் பார்க்க விரும்புகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்,
ரஷ்யா மீது ஏன் பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை என்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பினார்.
ரஷ்யாவின் ஏவுகணைகள், குண்டுவீச்சில் இருந்து உக்ரைனில் எஞ்சியுள்ள மக்களை உங்களால் தான் காப்பாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஆதரவா அல்லது நீங்கள் ரஷ்யா பக்கமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.