சீனாவிற்கு வருகை தந்த ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின்: புதிய ஒப்பந்தம் கையெழுத்து!
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் சீன தலைநகர் பெய்ஜிங்க்கு வந்தடைந்தார்.
கடந்த ஆண்டே நடைபெற இருந்த இந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக ஒத்தி வைக்கபட்டது. அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு பிப்ரவரி 4 திகதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில் இதன் தொடக்க விழாவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் வருகை தந்துள்ளார். விளாடிமிர் புதின் தன் வருகையை முன்னிட்டு சீனாவிற்கு ஒரு புதிய ஒப்பந்தம் ஒன்றையும் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ரஷ்யா சீனாவிற்கு 10 பில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு வழங்குவதற்கான ஒப்பந்தம் இருப்பதாக மாஸ்கோவ் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய ஒப்பந்தம் சீனா மற்றும் ரஷ்யாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வருகையை தொடர்ந்து நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தன்னை இந்த தொடக்க விழாவிற்கு வரும்படி அழைத்தமைக்கு நன்றி எனவும், இந்த ஒலிம்பிக் போட்டிகள் என்பது மிக பெரிய வேலை, இதை எனது சீன நண்பர்கள் எப்போதும் போல் சிறப்பாக செய்து இருப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய சீன ஜனாதிபதி ஜிங்பிங் இந்த சந்திப்பு இருநாட்டு நட்புறவிற்கு மேலும் உயிர்சக்தி சேர்த்து இருப்பதாக தெரிவித்தார்.
ரஷ்யா உக்கிரைன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா ஜனாதிபதி சீன வருகை மற்றும் இந்த புதிய ஒப்பந்தம் உலக நாடுகள் மத்தியில் பேசுபொருளாக மாறி வருகிறது.