தமிழர்கள் அதிகம் வாழும் சொர்க்கபூமி ரியூனியன் தீவு
வாழும் போதே சொர்க்கம் என்ற வார்த்தைக்கு உண்மை சேர்க்கிறது ரியூனியன் தீவு, வசீகரிக்கும் கடல், மனதை வருடும் காற்று, பனை மரங்கள் என அழகான தீவாக ஜொலிக்கிறது ரியூனியன்.
உலக பாரம்பரிய பூமி என யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ரியூனியன் தீவில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே மடகாஸ்கருக்கும், மொரீஷியஸ் தீவுகளுக்கும் இடையே உள்ள குட்டித் தீவு இதுவாகும்.
சுமார் 65 கி.மீ நீளமும், 45 கி.மீ அகலமும் கொண்ட இத்தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 16ம் நூற்றாண்டில் முதன்முறையாக அரேபிய மாலுமிகள் இத்தீவை கண்டுபிடித்ததாக தெரிகிறது, காலப்போக்கில் பிரான்சின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
அதாவது 1827ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது தமிழர்கள் கரும்பு தோட்டங்களில் பணியாற்றுவதற்காக ரியூனியன் தீவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
காலங்கள் செல்லச் செல்ல அனைத்து இன மக்களுக்கும் பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டு சமமாக வாழ்ந்து வருகின்றனர்.
அழகான காடுகள், மலைகள், அருவிகள் என சொர்க்கபூமியாக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது ரியூனியன்.
மொரீசியஸ் சென்று அங்கிருந்து ரியூனியன் தீவை அடையலாம், கொடிய வனவிலங்குகள் ஏதுமில்லாமல் உலகிலேயே அதிக மழைப்பொழிவு கொண்ட தீவாகவும் இது திகழ்கிறது.
இந்த தீவை நடந்து சென்றோ, குதிரை சவாரியாகவோ, வாகனங்களிலோ சுற்றிப் பார்க்கலாம்.
31 தங்கும் விடுதிகள் இங்கு அமையப்பெற்றுள்ளன, படகு பயணம், ஆழ்கடல் நீச்சல் குளம் என சாகச விளையாட்டு விரும்பிகளுக்கு நிச்சயம் விருந்தளிக்கும்.
உணவுகளை பொருத்தவரை அரிசி சார்ந்தே உணவு தயாராகிறது, வெட்டிவேர் எண்ணெய் இங்கு பிரசித்தி பெற்றது.
கரும்பிலிருந்து தயாராகும் ஒருவகை மதுவையும் ருசிக்கலாம், திருட்டு பயம் இல்லாததால் மிக தைரியமாக தீவின் அழகை கண்டு மகிழலாம்.
இங்கு வாழும் மக்களும் சுற்றுலா பயணிகளை அதீதி மரியாதையுடனும், பாரம்பரியத்துடனும் நடத்துவதும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என சொல்லப்படுகிறது.
The Blue Lava Tunnel
100 முறைக்கும் மேலாக நெருப்பு பிழம்புகளை ஆறாக கக்கியுள்ள இரண்டு எரிமலைகளே ரியூனியன் தீவின் சிறப்பம்சமாகும்.
22,000 ஆண்டுகள் பழமையான The Blue Lava Tunnelலில் நீலம், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற பாறைகள் என அழகை வியந்து ரசிக்கலாம்.
மின்னொளியின் வெளிச்சத்தில் இதிலுள்ள எச்சங்கள் கரைந்த சொக்லேட்டுகளை போன்று பிரம்மிப்பூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
பாராகிளைடிங்
பாராகிளைடிங் சாகச விரும்பிகளுக்கு நல்லதொரு அனுபவத்தை தருகிறது ரியூனியன் தீவு.
கடற்மட்டத்திலிருந்து 800மீற்றர் உயரத்தில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் பறவையை போன்று பறக்கலாம், மேலே உயரத்தில் இருந்து கொண்டு Saint-Leuன் அழகை கண்டு ரசிக்கலாம்.
இதுமட்டுமா ஹெலிகொப்டரில் பறந்து கொண்டே ஒட்டுமொத்த தீவின் அழகையும் ரசிப்பதும் த்ரிலிங்கான ஒன்றே.
மசாஜ்
வசீகரிக்கும் கடற்கரையில் மிதந்து கொண்டே மசாஜ் செய்வதும் தனி சுகம் தானே. உங்கள் துணையுடன் அல்லது தனியாக மசாஜ்-ம் செய்யப்படுகிறது, கண்களை மூடிக்கொண்டு மனதிற்கு இதமான மசாஜ் செய்வதை சற்று நினைத்து பாருங்கள்.
மன அழுத்தம், ஒற்றை தலைவலி, தசைவலி என அனைத்திற்கும் இங்கு தீர்வு கிடைத்துவிடும்.
டால்பின்களுடன் பயணம்
ரியூனியன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Saint-Gillesல் டால்பின்களுடன் நீந்தலாம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், 10 நிமிட பயணத்திற்கு பின்னர் டால்பின்கள் படகை சுற்றி வலம்வரத் தொடங்கும்.
நீச்சல் பயிற்சியாளர் உதவியுடன் நீச்சல் தெரிந்தவராக இருந்தால் கடலுக்கடியில் டால்பின்கள் அருகே மிக நெருக்கமாக செல்லலாம்.
விசில் சத்தத்திற்கு ஏற்றவாறு டால்பின்கள் உங்களை வரவேற்கும் என்பதில் சந்தேகமில்லை.
அப்பறம் என்ன!!! ரியூனியன் தீவிற்கு சுற்றுலா விசிட் போட்டு விடலாமே!!!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |