73 ஆண்டுகளுக்கு பிறகு மதுவிலக்கை நீக்கும் சவுதி அரேபியா - ஏன் தெரியுமா?
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை உடைய நாடு.
சமீப காலமாக சவுதி அரேபியா தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதித்திருந்த தடையை நீக்கியது.
மதுவிலக்கை நீக்கும் சவுதி
தற்போது மதுவிலக்கை நீக்க முன்வந்துள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 1952 ஆம் ஆண்டு மது விலக்கு அமுல்படுத்தப்பட்டது.
சொகுசு ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதிகள் என மொத்தம் 600 இடங்களில் மது விற்பனைக்கு அனுமதி வழங்க உள்ளது.
நியோம், சிண்டாலா தீவு மற்றும் செங்கடல் திட்டம் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் பீர், ஒயின் போன்றவை வழங்கலாம் என்றும், 20 சதவீதத்திற்கு அதிகமாக ஆல்ககால் உள்ள ஸ்பிரிட் போன்ற வலுவான மதுபானங்களுக்கான தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் மது விற்பனைக்கு அனுமதி இல்லை என்றும், தனிப்பட்ட மதுபான உற்பத்தியும் தடைசெய்யப்பட்டே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கு முன்னர் மதுவிலக்கை நீக்க சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.
என்ன காரணம்?
இந்த மதுபானக் கொள்கை சவுதி அரபியின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் 2030 இன் ஒரு பகுதியாகும்.
மதுபானக் கொள்கை சவுதி அரேபியா அதிக உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவும் என்றும் நம்பப்படுகிறது.
முக்கியமாக, எக்ஸ்போ 2030 மற்றும் கால்பந்து உலகக் கோப்பை 2034 போன்ற சர்வதேச நிகழ்வுகளுக்கு நாடு தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற இடங்களில், பயிற்சி பெற்ற ஊழியர்கள் மட்டுமே மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது விற்பனையை அதிகாரிகள் கவனமாகக் கண்காணிப்பார்கள் என்றும், எந்தவொரு தவறான பயன்பாடு அல்லது விதி மீறலும் தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |