செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!
இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் ED ரெய்டு
கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளரான சங்கர் என்பவரது வீடு மற்றும் செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதிநிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தனியார் டைல்ஸ் ஷோரூம் உரிமையாளர் வீடு மற்றும் கடை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தினர். அதாவது, சின்ன ஆண்டாங்கோவிலில் உள்ள 'தனலட்சுமி செராமிக்ஸ்' என்ற டைல்ஸ் நிறுவனம் மற்றும், அதன் உரிமையாளர் பிரகாஷ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதற்காக, 15க்கும் மேற்பட்ட மத்திய படை அதிகாரிகள் பாதுகாப்பு படையுடன் சோதனை நடத்தினர்.
தொடரும் 2-வது நாளாக சோதனை
இந்நிலையில், கரூரில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சோதனை நடத்திய 4 இடங்களில், தனலட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தில் சோதனை நிறைவடைந்ததையடுத்து மற்ற 3 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இச்சோதனையில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் நடக்கும் 2-வது நாள் அமலாக்கத்துறை சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆவணங்களை கைப்பற்றுவதற்காகவும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |