மக்கள் செலவு செய்வதற்காக கோடிக்கணக்கில் பணம் வழங்கும் நாடு
பொருளாதார மந்தநிலையை மீட்டெடுக்கவும், உள்நாட்டு செலவினங்களைஅதிகரிக்கவும் தென்கொரியா அரசாங்கம், மக்கள் செலவு செய்வதற்காக பணம் வழங்க உள்ளது.
இதற்காக, 23.3 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2 லட்சம் கோடி) நிதி ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டம், "வாழ்வாதார மீட்பு நுகர்வு கூப்பன்" என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது.
யாரெல்லாம் பணம் பெறலாம்?
இதன்படி, தென்கொரியாவில் குடிமகனாக பதிவு செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும், ஜூலை 21 முதல் குறைந்தது 150,000 வோன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9500) வழங்கப்பட உள்ளது.
அதேபோல், வறுமையில் உள்ள குடும்பங்கள் மற்றும் ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பங்கள் 300,000 வோன் வரை பெறுவார்கள். அடிப்படை வாழ்க்கைக் கொடுப்பனவைப் பெறுபவர்கள் 400,000 வோன் பெறுவார்கள்.
சியோல், கியோங்கி மாகாணம் மற்றும் இஞ்சியோனுக்கு வெளியே உள்ள பெருநகரம் அல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூடுதலாக 30,000 வோன் பெறுவார்கள்.
கடுமையான மக்கள்தொகை சரிவை எதிர்கொள்ளும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 84 கிராமப்புற சமூகங்களில் வசிப்பவர்களுக்கு கூடுதலாக 50,000 வோன் பெறுவார்கள்.
எப்போது பயன்படுத்தலாம்?
தேசிய சுகாதார காப்பீட்டு அமைப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பவர்கள், F-5, F-6 விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்களும் இதை பெற தகுதி பெறுவார்கள். கூடுதலாக, F-2-4 விசா வைத்திருக்கும் அகதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஜூலை 21 முதல் செப்டம்பர் 12 வரை, இந்த பண கூப்பனை பெற ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 30 ஆம் திகதி வரை இந்த கூப்பன் செல்லுபடியாகும், அதன் பிறகு பயன்படுத்தப்படாத தொகை அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படும்.
எங்கே பயன்படுத்த முடியும்?
இந்த பணத்தை பெறுபவர்கள் அதனை உள்ளூரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது சியோலில் வசிப்பவர்கள் அதை சியோலுக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
தகுதிபெற்ற உணவகங்கள், மளிகைக் கடைகள், முடி திருத்தும் கடைகள் மற்றும் ஆண்டு வருவாய் 3 பில்லியன் வோன்(இந்திய மதிப்பில் ரூ18 கோடி) அல்லது அதற்கும் குறைவான நிறுவனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
பெரிய நிறுவனங்களின் சில்லறை விற்பனையாளர்கள், பல்பொருள் அங்காடிகள், வரி இல்லாத கடைகள், ஆன்லைன் தளங்கள் மற்றும் டெலிவரி செயலிகளில் இந்த கூப்பன்களைப் பயன்படுத்த முடியாது.
இந்த திட்டத்தில் பங்கேற்கும் வணிகங்கள், கூப்பன்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்பதைக் குறிக்கும் பலகைகளை வைக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சியோங்னாமின் மேயர் லீ, வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 19 முதல் 24 வயதுடைய அனைவருக்கும் உள்ளூர் வவுச்சர்களில் 1 மில்லியன் வோன்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |