காஸாவிற்கு போர் கப்பலை அனுப்புவோம்... ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் அதிரடி
காஸா மக்களுக்கு உதவிப்பொருட்களுடன் புறப்பட்டுள்ள Flotilla படகிற்கு பாதுகாப்பளிக்க இராணுவ போர் கப்பலை அனுப்ப முடிவு செய்துள்ளதாக ஸ்பெயின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பளிக்கும் பொருட்டு
ஏற்கனவே flotilla படகிற்கு பாதுகாப்பளிக்கும் பொருட்டு இத்தாலி போர் கப்பல் ஒன்றை அனுப்பும் முடிவை அறிவித்திருந்தது. flotilla படகு முன்னதாக கிரேக்கத்திற்கு வெளியே ட்ரோன்களால் தாக்கப்பட்டதை அடுத்தே இத்தாலி அந்த முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு நியூயார்க் சென்றிருந்த ஸ்பெயின் பிரதமர் Pedro Sanchez செய்தியாளர் சந்திப்பில் தமது முடிவை அறிவித்திருந்தார்.
45 நாடுகளை சேர்ந்த ஆர்வலர்கள் குழு ஒன்று, காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் புறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும், மத்தியதரைக் கடலில் பாதுகாப்பான சூழ்நிலையில் பயணம் செய்வதற்கான எங்கள் குடிமக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்பெயின் அரசாங்கம் வலியுறுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து ஏற்பாடுகளுடனும் கார்டஜீனாவிலிருந்து ஒரு கடற்படைக் கப்பலை அனுப்ப இருப்பதாகவும், அவசியமானால் flotilla படகிற்கு உதவவும், தேவை ஏற்படும் என்றால் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கவும் என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரோன்கள் வட்டமிடுவது
ஸ்வீடிஷ் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உட்பட சுமார் 50 பேர்கள் flotilla படகில் காஸாவிற்கான உதவிப்பொருட்களுடன் புறப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கிரேக்க தீவான காவ்டோஸிலிருந்து 30 கடல் மைல்கள் (56 கி.மீ) தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் 12 ட்ரோன்களால் படகு தாக்கப்பட்டது.
மட்டுமின்றி, ஒவ்வொரு நாள் இரவும் தங்கள் படகின் மீது ட்ரோன்கள் வட்டமிடுவது வாடிக்கையாக உள்ளது என கிரெட்டா துன்பெர்க் குற்றஞ்சாட்டியிருந்தார். பாலஸ்தீனிய மக்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் ஆபத்துகளுக்கு நாங்கள் தற்போது எடுக்கக்கூடிய எந்த ஆபத்தும் நிகரல்ல என்றே துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
துன்பெர்க் உள்ளிட்டோரின் முயற்சியை கடுமையாக விமர்சித்து வரும் இஸ்ரேல், ட்ரோன் விவகாரத்தில் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |