சிங்கப்பூரில் இருந்து ராஜினாமா கடிதம் அனுப்பிய கோட்டாபய ராஜபக்ச! வெளியான பரபரப்பு தகவல்
சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக இலங்கை சபாநாயகரின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. கடிதம் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது ராஜினாமா கடிதத்தை வியாழக்கிழமை பிற்பகுதியில் நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சலில் அனுப்பியதாக தகவல் வெளியானது.
ராஜபக்ச சிங்கப்பூருக்கு வந்த சிறிது நேரத்திலேயே அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அந்த ராஜினாமா கடிதம் மின்னஞ்சல் வடிவில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரம் தெரிவித்தது.
கோட்டாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச்செல்ல உதவியது யார்?
இதனிடையே, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போது சபாநாயகருமான மொஹமட் நஷீத் சற்று முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்ததை உறுதி செய்தார்.
இலங்கையிலிருந்து வெளியேறி இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் புதன்கிழமை அதிகாலை மாலைதீவை சென்றடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில், இன்று (வியாழக்கிழமை) மதியம் சிங்கப்பூர் சென்றார்.
கோட்டாபய பயணித்த SV-788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சிங்கப்பூர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறினார் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய! வெளியான வீடியோ
இதுகுறித்து சிங்கப்பூர் வெளிநாட்டு அமைச்சு “கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் அடைக்கலம் கேட்கவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை” எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோட்டாபய சிங்கப்பூரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் அல்லது அமெரிக்கா செல்ல வாய்ப்புகள் இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.