ஓராண்டு கட்டாய இராணுவ சேவை அமுல்: சீனாவுக்கு எதிராக தீவு நாடு எடுத்துள்ள முக்கிய முடிவு
அதிகரித்து வரும் சீனாவின் அத்துமீறல்களை தொடர்ந்து தைவான் கட்டாய இராணுவ சேவையை நான்கு மாதங்களில் இருந்து ஒரு வருடமாக நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
சீனா தைவான் மோதல்
தைவான் சீனாவுக்கு திரும்ப வேண்டும் என்று சீன அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு ஜனநாயக தைவான் மறுப்பு தெரிவிப்பதுடன், தங்கள் தீவு நாடு சுதந்திரமானது என்றும், "இரண்டு அரசாங்கம் ஒரே நாடு" என்ற திட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாகவும் அறிவித்து வருகிறது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக தைவான் பாதுகாப்பு எல்லைக்குள் சீனா தொடர்ந்து விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பி தீவு நாட்டை அச்சுறுத்தி வருகிறது.
Chinese fighter jets(Xinhua /AP)
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு 70 க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் தைவான் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து தைவான் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் சீனா தனது மிகப்பெரிய ஊடுருவலைத் தொடங்கியுள்ளதாகவும் தைவான் அரசாங்கம் குற்றம்சாட்டி இருந்தது.
கட்டாய இராணுவ சேவை நீட்டிப்பு
சீனாவின் போர் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென், தைவானுக்கு எதிரான சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகவும் வெளிப்படையாகி வருகின்றன.
“யாரும் போரை விரும்பவில்லை... ஆனால் என் சக நாட்டு மக்களே, அமைதி வானில் இருந்து விழாது." என்று குறிப்பிட்டுள்ளார்.
Reuters
அத்துடன் தற்போதைய நான்கு மாத இராணுவ சேவை வேகமான மற்றும் எப்போதும் மாறிவரும் சூழ்நிலையை சந்திக்க போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டு, 2024ம் ஆண்டு முதல் நாட்டில் ஓராண்டு ராணுவ சேவையை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நீட்டிக்கப்பட்ட ராணுவ சேவையானது ஜனவரி 1, 2005 க்குப் பிறகு பிறந்த ஆண்களுக்கு பொருந்தும் என்று ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.
1949 இல் சீன உள்நாட்டுப் போரின் முடிவில் தைவானும் சீனாவும் பிரிந்தன, மேலும் சீனாவின் ஒரு பகுதியாக மாறுவது தீவு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது, எனவே "நமது எதிர்கால சந்ததியினருக்கு ஜனநாயக வாழ்க்கை முறையை உறுதி செய்வதற்கான மிகவும் கடினமான முடிவு இது” என்று சாய் இங்-வென் விவரித்துள்ளார்.
ANI