Taylor Swift இசை நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்ட பகீர் சம்பவம்... ஈராக்கிய இளைஞர் கைது
ஆஸ்திரியா தலைநகரில் Taylor Swift இசை நிகழ்ச்சியின் போது தாக்குதலை முன்னெடுக்கத் திட்டமிட்ட விவகாரத்தில் ஈராக்கிய இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார்.
மேலும் பல சந்தேக நபர்கள்
குறித்த தகவலை ஆஸ்திரியாவின் உள்விவகார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இதே விவகாரத்தில் ஏற்கனவே கைதாகியுள்ள 19 வயது நபருக்கும் தற்போது கைதாகியுள்ள 18 வயது ஈராக்கிய இளைஞருக்கும் தொடர்பிருப்பதாகவே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும், குடியிருப்புகள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
20,000 ரசிகர் பட்டாளத்துடன் வியன்னாவின் Ernst Happel அரங்கத்தில் முன்னெடுக்கப்பட இருந்த Taylor Swift இசை நிகழ்ச்சியின் போது தாக்குதலை முன்னெடுக்க அந்த 19 வயது நபர் திட்டமிட்டிருந்தார்.
மட்டுமின்றி, தாம் ஐ.எஸ் ஆதரவாளர் என்றும் அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் வியன்னாவில் இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க Taylor Swift திட்டமிட்டிருந்தார்.
Taylor Swift இசை நிகழ்ச்சி
இந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மூன்று நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை 17 மற்றும் 15 வயதுடைய ஆஸ்திரிய சிறுவர்கள் இருவர் இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ளனர்.
15 வயது நபர் விடுவிக்கப்பட்டதுடன், அவர் நேரில் பார்த்தவர் என அடையாளப்படுத்தப்படுவார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஈராக்கிய இளைஞரும் ஐ.எஸ் ஆதரவாளர் என அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் இந்த சதி திட்டத்தில் அவருக்கு பங்குண்டா என்பது விசாரிக்கப்படுகிறது. Taylor Swift இசை நிகழ்ச்சியின் போது தாக்குதல் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவு அமைப்புகளே ஆஸ்திரிய நிர்வாகத்திடம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்தே தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |