இஸ்ரேல் தலைநகரை உலுக்கிய சம்பவம்... இனி தொடரும் என ஹமாஸ் படைகளின் பிரிவு
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் யூதர்கள் தொழுகைகூடம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஹமாஸ் படைகளின் ஒரு பிரிவு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
யூதர்கள் தொழுகைகூடம் அருகே முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலை இஸ்ரேல் பொலிசாரும் Shin Bet உளவு அமைப்பும் பயங்கரவாத தாக்குதல் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
வெடிகுண்டுடன் வந்த நபர் கொல்லப்பட்டார் என்றும், வழிபோக்கர் ஒருவர் காயமடைந்தார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் முன்னெடுத்துவரும் கொடூரமான திட்டமிட்ட படுகொலைகள் நீடிக்கும் வரையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்றே பொறுப்பேற்றுக்கொண்ட அந்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜூலை 31ம் திகதி ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கான பழி தீர்க்கும் தாக்குதல் இதுவென்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஹனியே படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவோ இல்லை என்றோ இஸ்ரேல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
பழி தீர்க்கப்படும் என ஈரான்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் ஆயுததாரிகள் இஸ்ரேல் எல்லையில் நுழைந்து திடீர் தாக்குதலை முன்னெடுத்ததில் 1,200 பேர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அதற்கு பழி தீர்க்கும் வகையில் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 40,000 கடந்துள்ளது.
காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் டெல் அவிவ் நகரில் தரையிறங்கிய ஒரு மணி நேரத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது.
தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கப்படும் என ஈரான் சபதமெடுத்துள்ள நிலையில், ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலுக்கு எதிராக பகை போக்க காத்திருப்பதால், இஸ்ரேல் - ஹமாஸ் போர் மத்திய கிழக்கில் வியாபிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |