ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி அழைப்பு... மெளனம் கலைத்த டொனால்டு ட்ரம்ப்
உக்ரைனில் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் குறித்து டொனால்ட் ட்ரம்பும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் விவாதித்துள்ளனர்.
கருத்து மோதலாக
கடந்த மாதம் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒரு கருத்து மோதலாக வெடித்த பிறகு, அது அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சர்வதேச உறவுகளை முடிவுக்குக் கொண்டுவரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
மட்டுமின்றி ஜெலென்ஸ்கி மூன்றாம் உலகப் போரை தூண்டுவதாக குற்றஞ்சாட்டியதுடன், வெள்ளை மாளிகையில் இருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டும் என்றும் ட்ரம்ப் அப்போது ஆணையிட்டார்.
ஆனால், இன்று ஜெலென்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், தலைவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தை நோக்கி மிகவும் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் ஒரு சிறப்பான தொலைபேசி உரையாடலை முடித்தேன். அது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளையும் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் இணைப்பதற்காக நேற்று ஜனாதிபதி புடினுடன் முன்னெடுக்கப்பட்ட உரையாடலின் அடிப்படையில் பெரும்பாலான விவாதங்கள் நடைபெற்றன என்றார்.
அத்துடன், நாங்கள் மிகவும் சரியான பாதையில் முன்னேறுகிறோம், விவாதிக்கப்பட்ட தகவல்கள் குறித்த துல்லியமான விளக்கத்தை அளிக்குமாறு வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸிடம் நான் கேட்டுக்கொள்வேன்.
நீடித்த அமைதி
அவர்கள், அறிக்கை வெளியிடுவார்கள் என ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். ஜனாதிபதி ட்ரம்புடனான தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் வெளிப்படையான உரையாடலை நடத்தினேன்.
போருக்கு உண்மையான முடிவு கட்டி, நீடித்த அமைதியை அடைய உக்ரைனும் அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அமெரிக்காவுடன், ஜனாதிபதி ட்ரம்புடன் சேர்ந்து, அமெரிக்க தலைமையின் கீழ், இந்த ஆண்டு நீடித்த அமைதியை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படிகளில் ஒன்று எரிசக்தி மற்றும் பிற பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். அப்படியான ஒரு நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, உக்ரைனியர்கள் அமைதியை விரும்பும் மக்கள் என்பதை வலியுறுத்தியதாகவும், அதனால்தான் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |