ஆறு மாதங்களில் 6 போர்களை நிறுத்தியதாக கூறும் டிரம்ப் - உண்மை என்ன?
கடந்த ஜனவரி மாதம் 2 வது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், கடந்த 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.
6 போர்களை நிறுத்தியதாக கூறும் டிரம்ப்
தற்போது ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவதில் முனைப்பு காட்டி வரும் டிரம்ப், ரஷ்யா அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
ஆனால், போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசை பெறும் முனைப்பில் உள்ள டிரம்ப், போர்களை நிறுத்திய காரணத்திற்காக எனக்கு 4-5 முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் எனக்கு தர மாட்டார்கள். லிபரல் கட்சியினருக்கு மட்டுமே தருவார்கள் என ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
மேலும், சில நாடுகள் அவருக்கு நோபல் பரிசு தர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளன. ஆனால், டிரம்ப்பின் போர் நிறுத்தம் தொடர்பான கருத்தை பலரும் மறுத்து வருகின்றனர்.
இஸ்ரேல் ஈரான் போர்
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, கடந்த ஜூன் 13 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல்தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இரு நாடுகளுக்குமிடையே போர் வெடித்தது.
இதைத்தொடர்ந்து, ஜூன் 22 ஆம் திகதி ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியது. ஈரானும் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் இருக்கும் என டிரம்ப் அறிவித்தார்.
இரு நாடுகளும் போரை நிறுத்தினாலும், அது தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ஈரான் மீண்டும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் கூறியிருந்தது.
நாங்கள் போர் நிறுத்தத்தில் இல்லை. போரின் கட்டத்தில் உள்ளோம். இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் இன்னொரு போர் நடைபெறலாம் என ஈரான் உச்சத்தலைவரின் தலைமை ராணுவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மே 7 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு நாடுகளும் ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்கிக் கொண்டன.
மே 10 ஆம் திகதி இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இரு நாடுகளின் தரப்பில் இருந்தும், போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
ஆனால், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலே போர் நிறுத்தத்தை அறிவித்தோம் என இந்திய வெளியுறவுதுறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இந்த போர் நிறுத்தத்தில் எந்த மூன்றாம் நாட்டின் தலையீடும் இல்லை என இந்தியா பலமுறை மறுப்பு தெரிவித்துள்ள நிலையிலும், நான் தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
தாய்லாந்து கம்போடியா போர்
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்தும் கம்போடியாவும் கடந்த ஜூலை 24 ஆம் திகதி எல்லையில் மோதிக்கொள்ள தொடங்கின.
3 நாட்கள் நீடித்த இந்த போரில், 32 பேர் உயிரிழந்ததாகவும், 28 ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் காயமடைந்தாகவும் தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்களிடமும் தனித்தனியாக பேசினேன். இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என டிரம்ப் அறிவித்தார்.
இதனையடுத்து, மலேசியாவில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், இரு நாடுகளும் மோதல் தொடர்பாக மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இரு நாடுகளும் அமைதியை கடைபிடிக்குமாறு சமீபத்தில் சீனா வலியுறுத்தியது.
காங்கோ ஜனநாயக குடியரசு - ருவாண்டோ
ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ ஜனநாயக குடியரசும், ருவாண்டோவும் பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டது.
கடந்த ஜூன் 27 ஆம் திகதி, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் இரு நாடுகளின் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், "இன்று வன்முறை மற்றும் அழிவு முடிவுக்கு வருகிறது. முழு பிராந்தியமும் நம்பிக்கை, வாய்ப்பு, செழிப்பு மற்றும் அமைதியின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது" என தெரிவித்தார்.
ஆனால், ருவாண்டோ ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சி குழுவும், காங்கோ ராணுவமும், தாக்குதல்கள் நடத்தி, படைகளை அதிகரிப்பதன் மூலம்,ம் அமைதி ஒப்பந்தத்தை மீறியதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகிறது.
ஆர்மினியா அஜர்பைஜன்
1988 ஆம் ஆண்டு முதல் ஆர்மினியா மற்றும் அஜர்பைஜன் இடையே எல்லை தாண்டிய மோதல் நடைபெற்று வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இரு நாடுகளின் தலைவர்களும் வெள்ளை மாளிகையில், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்ததில், ஜங்கேசூர் நடைபாதையில், 99 ஆண்டுகளுக்கு அமெரிக்காவிற்கு பிரத்யேக சிறப்பு மேம்பாட்டு உரிமைகளை வழங்க அர்மீனியா ஒப்புக்கொண்டது. இது சர்வதேச அமைதி மற்றும் செழிப்புக்கான டிரம்ப் பாதை(TRIPP) என அழைக்கப்படுகிறது.
இந்த பாதை, ரஷ்யா அல்லது ஈரான் வழியாக செல்லாமல், துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு அப்பால், மத்திய ஆசியாவிற்கு மக்கள் மற்றும் பொருட்கள் செல்ல அனுமதிக்கும்.
பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சமநிலையை மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக, ரஷ்யா மற்றும் ஈரான் குற்றஞ்சாட்டியது.
செர்பியா கொசவா
2008 ஆம் ஆண்டில் செர்பியாவில் இருந்து சுதந்திரம் பெறுவதாக கொசவா பிரகடனம் செய்தது. ஆனால், செர்பியா இந்த சுதந்திரத்தை ஏற்கவில்லை.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது.
டிரம்ப்பின் முதல் ஆட்சிக்காலத்தில் 2020 ஆம் ஆண்டு வாஷிங்டன் ஒப்பந்தம் எனப்படும் இரு நாடுகளுக்கும் இடையேயான அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இரு நாடுகளும் தற்போது வரை மோதலில் ஈடுபட்டு வருகிறது, இரு நாடுகளுக்கு இடையே அமைதியை மேற்கொள்ள பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு நேட்டோ நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எகிப்து எத்தியோப்பியா
நைல் நதி மீது கட்டப்படும் கிராண்ட் எத்தியோப்பியாவின் மறுமலர்ச்சி அணை தொடர்பாக மோதல் உள்ளது.
இந்த அணை நீர் விநியோகத்தை நிறுத்தும் என எகிப்தும், எரிசக்தி தேவைக்கு அணை அவசியம் என எத்தியோப்பியாவும் கருத்து தெரிவித்துள்ளது.
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய முயன்றார். ஆனால், இதில் இறுதி ஒப்பந்தம் ஏற்படவில்லை.
எகிப்து இந்த அணையை தகர்க்க கூடும் என டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். டிரம்ப் போரை தூண்டுவதாக குற்றஞ்சாட்டிய எத்தியோப்பிய இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் இதனை ஒரு போர் நிறுத்தமாகவே கருதுகின்றனர். நான் தலையிடாவிட்டால் போர் நடந்திருக்கும் என டிரம்ப் தெரிவித்தார். இந்த அணையை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |