20,000 உயிர்களை காவு வாங்கிய துருக்கி-சிரியா நிலநடுக்கம்: மிகப்பெரிய தொகையை வழங்கிய உலக வங்கி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கரமான நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமான பொது மக்கள் உயிரிழந்து இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
துருக்கி-சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு தென்கிழக்கு நாடுகளையும் 7.8 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் திங்கட்கிழமை தாக்கியது.
நிலநடுக்கம் கஹ்ராமன்மரஸ்(Kahramanmaras) மாகாணத்தில் பசார்சிக்(Pazarcik) நகரில் 6 மைல் ஆழத்தில் காசியான்டெப்(Gaziantep) இருந்து 20 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும், ஐந்து சக்திவாய்ந்த பின் அதிர்வுகள் இருந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20,000க்கும் அதிகமான உயிரிழப்புகள்
இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருப்பதாக இரு நாட்டு அதிகாரிகளும் வியாழக்கிழமை வெளியிட்ட சமீபத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளனர்.
EPA
அதே நேரத்தில் 75,500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும், வீடிழந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் குளிர், பசி மற்றும் விரக்தியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
துருக்கிய பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் 17,134 இறப்புகளையும் 70,347 காயங்களையும் உறுதிப்படுத்தியுள்ளது. சிரிய சுகாதார அமைச்சகம் 1,347 பேர் கொல்லப்பட்டதாகவும், 2,295 பேர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியாவில் போராளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் 2,950 குடிமக்கள் காயமடைந்து இருப்பதாக அந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் வெள்ளை ஹெல்மெட்கள் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Reuters
உதவி கரம் நீட்டிய உலக வங்கி
பேரழிவை தொடர்ந்து துருக்கிக்கு உலக வங்கி $1.78 பில்லியன் நிவாரணம் மற்றும் மீட்பு நிதியுதவியை வழங்குகிறது, இதில் $780 மில்லியன் உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் துருக்கி மற்றும் சிரியாவிற்கு அவசர மனிதாபிமான உதவியாக 85 மில்லியன் டாலர்களை வழங்கும் என தெரிவித்துள்ளது.