காஸா போர் நிறுத்தம்... கூட்டாக வலியுறுத்திய பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அரசாங்கங்கள் ஒரு கூட்டு அறிக்கையில் காஸாவில் உடனடியாக போர்நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளன.
உடனடியாக போர்நிறுத்தம்
அத்துடன் மனிதாபிமான அணுகலை மீட்டெடுக்க இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் ஒப்புதலுடன் காஸா மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்துள்ள இஸ்ரேல், இரண்டே நாட்களில் பெண்கள், சிறார்கள் உட்பட 510 பேர்களை கொன்றுள்ளது.
பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படைகள் மறுப்பதாக குறிப்பிட்டே தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. ஆனால், காஸா பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்களை மொத்தமாக வெளியேற்றும் திட்டம் இதுவென்றே சமீபத்திய அரசியல் நகர்வுகளை ஒப்பிடும் ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர்.
காஸா பகுதியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். ஜனாதிபதி ட்ரம்பின் கோரிக்கையை படிப்படியாக நிறைவேற்றி வருவதாக இஸ்ரேல் தரப்பும் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள் முன்வைத்துள்ளன.
ஹமாஸ் படைகளை
காஸா பகுதிக்கான தண்ணீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட மனிதாபிமான அணுகலை மீட்டெடுக்கவும், மருத்துவ தேவைகளுக்கான அணுகலை உறுதி செய்யவும் இஸ்ரேலை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என கூட்டு அறிக்கை ஒன்றில் மூன்று நாடுகளும் குறிப்பிட்டுள்ளன.
மட்டுமின்றி, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி தற்காலிக மருத்துவ வெளியேற்றங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் மூன்று வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி கொத்துக் கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர்கள், இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் ஹமாஸ் படைகளை கேட்டுக் கொண்டனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலை இராணுவ வழிமுறைகள் மூலம் தீர்க்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |