பதிலடிக்கு போதுமான ஆயுதங்கள் உள்ளது: நோட்டோவில் இணைவதே உக்ரைனின் குறிக்கோள்
பதிலடி தாக்குதலை முன்னெடுக்க உக்ரைனிடம் போதுமான ஆயுதங்கள் இருப்பதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சூளுரை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளும் தற்காப்பு மற்றும் பதிலடி தாக்குதலுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
உக்ரைன் ஜனாதிபதி சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நாடுகளின் ஆயுத உதவிகளை உறுதிப்படுத்தி இருந்த நிலையில் , ரஷ்யாவிற்கு எதிரான பதிலடி தாக்குதலுக்கு உக்ரைன் தற்போது தயாராக இருப்பதாக சூளுரைத்தார்.
மேலும் இதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என உறுதியாக இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
போதுமான ஆயுதங்கள் உள்ளது
இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா(Dmytro Kuleba) ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட தேவையான அனைத்து ஆயுதங்களும் உக்ரைனிடம் இருப்பதாக தெரிவித்தார்.
Reuters
அத்துடன் நட்பு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் உக்ரைன் ஏற்கனவே வெளியே எடுத்து விட்டதாகவும், பதிலடி தாக்குதலில் உக்ரைன் அடையும் வெற்றியை பொறுத்தே மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் உக்ரைன் இணைவது தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நோட்டோவில் இணைவதே உக்ரைனின் இறுதியான குறிக்கோள். அதற்கு நாங்கள் இதில் வெற்றி பெற்றாக வேண்டும், தங்களது இந்த குறிக்கோளை அடையும் வரை நட்பு நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை சப்ளை செய்யும் என்று உக்ரைன் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.